Tuesday, June 30, 2015

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்...

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்...சேமிக்க சிறந்த வழிகள் !தொகுப்பு: செ.கார்த்திகேயன், படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்.
எந்த குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும் அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்தான் பெற்றோரின் மிகப் பெரிய சொத்து. பெற்றோரின் கடைசிக் காலத்துக்கு அவர்கள் பெற்ற குழந்தைகளையே பலரும் நம்பி இருக்கின்றனர். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தந்தால்தான் அவர்களும் நன்றாக இருப்பார்கள்: பெற்றோர்களையும் நல்லபடியாகப் பார்த்துக்கொள்வார்கள்.
ஆனால், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகப் பணத்தைச் சேமிப்பதில் நம்மவர்களுக்கு இணையாக உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது. குழந்தை பிறந்தவுடன் அதன் பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைப்பதாக இருந்தாலும் சரி, சின்னதாக தங்க நகை வாங்கி வைப்பதாக இருந்தாலும் சரி நம்மவர் களுக்கு இணை நம்மவர்களே.
குழந்தைகள் பெயரில்..!
குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக நிறைய சேமிக்கவேண்டும் என்கிற எண்ணம் நமக்கு  இருந்தாலும், அதற்கான சரியான முதலீட்டு வழிமுறைகளை நாம் தேர்வு செய்கிறோமா என்பது மிகப் பெரிய கேள்வி. அதிக லாபம் தரக்கூடிய, அதே நேரத்தில் நம் குழந்தைகளுக்கு மிகச் சரியாக பயன்தரக்கூடிய திட்டங்களில் நாம் முதலீடு செய்கிறோமா என்றால், இல்லை என்பதே பலரது பதிலாக இருக்கும். முதலீட்டுக்கு உதவும் ஏஜென்ட்கள் சிபாரிசு செய்யும் திட்டங்களை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு  வாங்கி விடுகிறோம்.  
ஏஜென்ட்கள் சொல்லும் திட்டங்களை நாம் மறுக்காமல் வாங்குவதற்கு பல ஃபண்ட் நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும் ஒரு சிம்பிளான டெக்னிக்கைப் பின்பற்றுகின்றன. அதாவது, புதிதாக ஆரம்பிக்கும் சில திட்டங்களின் பெயரோடு 'சைல்டு/சில்ட்ரன்’ என்கிற வார்த்தையைச் சேர்த்துக்கொண்டுவிடுகின்றன.  'சில்ட்ரன் எஜுகேஷன் ஃபண்ட்’ எனவும் 'சில்ட்ரன் இன்ஷூரன்ஸ் பாலிசி’ என்றும் புதிய திட்டங்களுக்கு பெயர் வைப்பதன் மூலம், நம்மை எளிதில் ஏமாற்றி ஃபண்டுகளையும் பாலிசிகளையும் வாங்க வைக்கின்றன. ஃபண்டிலோ அல்லது பாலிசியிலோ 'சைல்டு/சில்ட்ரன்’ என்கிற வார்த்தை இருப்பதினாலேயே அது குழந்தைகளுக்கு ஏற்ற பாலிசி என்று சொல்லிவிட முடியாது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 'சைல்டு’ என்கிற வார்த்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது நம் குழந்தையின் எதிர்காலத்துக்கு எந்த வகையில் ஏற்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே அதில் பணத்தைப் போட ஆரம்பிக்கவேண்டும்.
இன்ஷூரன்ஸ் முதலீடல்ல!
குழந்தை பிறந்தவுடன் ஒரு தகப்பன் என்பவன் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலையில் இருப்பான். அவனுக்குள் மகிழ்ச்சியும் பொறுப்புணர்வும் பல மடங்கு அதிகமாக இருக்கும். இந்தச் சமயத்தில் அந்த தகப்பனால் ஒரு சரியான இன்ஷூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்ய முடியுமா என்பது சந்தேகமே. வங்கியில் வேலை பார்க்கும் குமாருக்கும் அப்படித்தான் நடந்தது. குமாருக்கு குழந்தை பிறந்தவுடனே அவருடைய இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் அவரை அணுகி 'சைல்டு இன்ஷூரன்ஸ் பிளான்’ ஒன்றை வழங்கினார். தன் குழந்தைக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற மனநிலையில் இருந்த குமார் அந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை உடனே வாங்கினார்.
ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு அந்த பாலிசியின் டாக்குமென்ட்களை படித்த போதுதான், அது குழந்தையின் 18 வயது வரையிலான சேமிப்புடன் கூடிய ஆயுள் காப்பீடு பாலிசி என்று தெரிந்தது. பாலிசி முதிர்வின்போதுதான் முதிர்வுத் தொகை வழங்கப்படும் என்றும் அதில் சொல்லி இருந்தார்கள். குழந்தையின் எதிர்கால கல்வித் தேவை என்ற ஒரே விஷயத்துக்காக குமார் அந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து விட்டார்.
ஆனால், அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசியின்படி, குழந்தையின் 18 வயது வரை குமார் தொடர்ந்து பிரீமியம் செலுத்தவேண்டும். பாலிசி முதிர்வின்போது பாலிசித் தொகையுடன் (sum assured) சேர்த்து போனஸ் தொகையும் வழங்கப்படும். அதேசமயம், 18 வயதிற்குள் குழந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமானால், பாலிசித் தொகை மற்றும் அந்தக் காலம்வரை அறிவிக்கப்பட்ட போனஸ்களும் சேர்த்து குமாருக்கு (Nominee/policy holder) வழங்கப்படும்.
குடும்பச் செலவு, எதிர்காலத் தேவைகள் மற்றும் பாலிசி பிரீமியம் தொகை முதலியன குமாரின் வருமானத்தையே நம்பி உள்ளன. குழந்தை வளரும் பருவத்தில் குமாருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், பிரீமியம் கட்டுவது தடைபட்டு பாலிசி லேப்ஸ் ஆகும் வாய்ப்பு அதிகம். அப்படி பாலிசி லேப்ஸ் ஆகிவிட்டால் குழந்தையின் எதிர்காலத் தேவைக்கு எந்த பணமும் கிடைக்காது. அப்படி இருக்க, அந்தக் குழந்தைக்கு எப்படி ஒளிமயமான எதிர்காலம் அமையும்?
டேர்ம் பிளான் பெஸ்ட்!  
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், தன் குழந்தைக்கு குமார் எடுத்த பாலிசி பொருத்த மானதல்ல என்று தெரியவரும். குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டுமெனில், நாம் முதலில் கவனிக்கவேண்டியது, குழந்தையின் தகப்பனுக்குப் போதிய அளவு ஆயுள் காப்பீடு இருக்கிறதா என்பதே. போதுமான அளவு ஆயுள் காப்பீடு இல்லையெனில், வேறு எந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் எடுப்பதைவிட 'டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி’ எடுப்பதே சரியான முடிவாக இருக்கும்.
நாம் எடுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி நீண்டகால அளவுக்கு நமக்கு காப்பீடு அளிப்பவையாக இருக்கவேண்டும். உதாரணமாக, 30 வயதில் இருக்கும் பெற்றோர் 20 முதல் 25 ஆண்டுகளுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கவேண்டும். குழந்தையின் அப்பா இளம் வயதில் இருக்கும்போதே இந்த பாலிசியை எடுத்தால் குறைவான பிரீமியம் தொகையில் நீண்டகாலத்திற்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும்.
அடுத்து நாம் கவனிக்கவேண்டியது, குழந்தை வளரும் பருவத்தில் நமது குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் முக்கியமாக குழந்தைக்கும், தேவையான அளவு ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். இதற்கு ஃபேமிலி ஃப்ளோட்டர்
(Family Floater) பாலிசி நமக்கு கைகொடுக்கும். மேலும், இன்று நாம் வேலை செய்யும் நிறுவனங்கள் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் நமக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸை அளிக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் குரூப் இன்ஷூரன்ஸ் திட்டத்தின் விதிமுறைகள்படி, நமது குழந்தையையும் அதில் இணைக்கவேண்டும். இது குழந்தைக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்க வழி செய்யும்.
  இன்றே, இப்போதே..!
குழந்தை பிறந்தவுடன், நமது மனதில் அது ஒரு இன்ஜினீயராக, மருத்துவராக வரவேண்டும் என்று கனவு காண்போம். இன்றையச் சூழலில் நான்கு வருடம் இன்ஜினீயரிங் கோர்ஸ், கேப்பிடேஷன் ஃபீஸ் இல்லாமல், ஆறு லட்சம் ரூபாய் தேவை. குழந்தை தற்போது பிறந்திருக்குமானால், இந்தப் படிப்புக்கான செலவு 17 வருடங்களுக்குப் பின் 7% பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் 19 லட்சம் ரூபாயாக இருக்கும். இதற்கான சேமிப்பை நாம் இன்றே, இப்போதே தொடங்கிவிடுவது நல்லது.
இரண்டாவது, முதுகலைப் படிப்புக்கு (Post Graduation)சேமிப்பது. இந்தச் செலவு குழந்தையின் 20 அல்லது 21 வயதுகளில் வரலாம். அன்றைய தேதியில் முதுகலைப் படிப்பு இரண்டு ஆண்டு படிக்க அதிகபட்சம் 23 லட்சம் ரூபாய் செலவாகும். இன்னும் சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். உள்ளூரில் படிப்பதாக இருந்தாலும் வெளிநாட்டில் படிப்பதாக இருந்தாலும், வங்கியில் கல்விக் கடன் வாங்குவதே  எதிர்காலத்தில் சாத்தியமான விஷயம்.
அடுத்து, மகன்/மகளின் திருமணச் செலவு. இன்று பலரும் திருமணத்தை 'கிராண்ட்’-ஆக செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். விளைவு, ஓய்வுக்காலத்துக்கான பி.எஃப்.-லிருந்து பணத்தை எடுக்கவேண்டியச் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற நெருக்கடிகளைத் தவிர்க்க,  குழந்தை பிறந்ததும் திருமணத்துக்கு என தனியாக ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க ஆரம்பித்துவிட வேண்டும். 23 வயதில் இத்தகைய செலவு வரும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது கல்யாணத்துக்கு 10 லட்சம் ரூபாய் தேவை எனில், 22 வருடங்களுக்குப் பிறகு 47.40 லட்சம் ரூபாய் தேவையாக இருக்கும்.
படிப்பு, திருமணம் போக, குழந்தைகளுக்குத் தேவையான சைக்கிள், 18 வயதில் ஒரு மோட்டார் பைக், செல்போன் போன்றவற்றை பரிசாக அளித்து உற்சாகப்படுத்தவும் சேமிப்பின் ஒரு  பகுதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
எப்படி சேமிப்பது?
நாம் வாங்கும் சம்பளத்தில் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும். அது குழந்தை களுக்காக இருக்கவேண்டும் என்றானால் அதைவிட சந்தோஷம் பெற்றோர்களுக்கு வேறென்ன வேண்டும்?  உதாரணத்திற்கு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 25-வது வயதில் 25,000 ரூபாய் சம்பாதிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் செய்யவேண்டிய முதலீட்டு நடைமுறைகளை இனி பார்ப்போம்.
25 வயதில்  ஒருவருக்கு குழந்தை பிறப்பதாக கணக்கில்கொள்வோம். குழந்தை பிறந்தபிறகு, 0-5 வருடங்களுக்கு மாதம் 3,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். பணவீக்கம் ஆண்டுக்கு 7% உயர்கிறது எனில், அதற்கேற்ப ஒருவரது சம்பளமும் ஆண்டுக்கு 7% அதிகரிக்கும் என்று வைத்துக்கொள்ளலாம்.  
6-10 வயது வரை செய்துவரும் முதலீட்டுடன் 3,000 ரூபாயைச் சேர்த்து மாதம் 6,000 ரூபாயை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். குழந்தையின் பத்தாவது வயதில் ஒரு சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என்றாலும் இந்த முதலீட்டிலிருந்தே தேவையான தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.  
குழந்தைகளின் 11-15 வயது வரை மாதம் 10,000 ரூபாயை ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். 16-23 வயது வரை மாதம் 15,000 ரூபாயை முதலீடு செய்யவேண்டும். இந்தச் சேமிப்பை குழந்தையின் படிப்பு (இதில் வெளிநாட்டு மேற்படிப்பு அடங்காது!) மற்றும் திருமணச் செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதற்குத் தேவையான முதலீட்டு விவரங்கள்  சேமிப்புத் திட்ட அட்டவணையில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. இந்த முதலீடு ஒரு குழந்தைக்கே.  இரண்டு குழந்தைகள் என்பவர்களுக்கு வருடா வருடம் உயரும் வருமானத்திலிருந்து தேவைக்கு தக்கபடி முதலீட்டையும் உயர்த்திக்கொள்வது அவசியம்.
இனி என்ன யோசனை, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இதுவரை சேமிக்கத் தொடங்காதவர்கள் உடனே அதில் இறங்க வேண்டியதுதானே!  

குட் பை டயாபட்டீஸ்!

குட் பை டயாபட்டீஸ்!
நம் நாட்டில் வீட்டுக்கு வீடு மரம் நடுகிறோமோ இல்லையோ... வீட்டுக்கு வீடு சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். டயாபட்டீஸைப் பொறுத்தவரை, உலகிலேயே  நாம்தான் முதல் இடத்தில் இருக்கிறோம் என்பது வேதனையான விஷயம். நமது நாட்டில் சுமார் 6.24 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சொல்கிறது. 
வாழ்க்கைச் சூழலும், உணவுப் பழக்கமும் மாறியதால் வந்த விபரீதம் இது. சிறியவர் - பெரியவர், ஆண் - பெண், ஏழை - பணக்காரர் என்ற எந்தப் பாகுபாடுகளும் இல்லாமல், அனைவரையும் ஆட்டிப்படைக்கும் நோய் இது. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்தாவிட்டால், கண், கால், இதயம், சிறுநீரகம், நரம்பு மண்டலம் என்று உடலைக் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கும்  ஆபத்தைத் தரும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்டால் அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் வி.மோகன் சொல்லும் ஆலோசனைகள் இங்கே...
01 நல்ல உடல் நலத்துடன் இருக்கும் நார்மலான ஒரு மனிதனின் ரத்தத்தில் சர்க்கரை அளவு, காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு 70-100 மில்லி கிராம்/டெசி லிட்டரும் (Mg/dl), சாப்பிட்ட பின்பு 100-140 மில்லி கிராம்/டெசி லிட்டரும் இருக்க வேண்டும்.  இந்த அளவைவிட அதிகமாகக் காணப்பட்டால், சர்க்கரை நோய் இருப்பதாக அர்த்தம்.
காரணங்கள்
02  உணவு நமது வயிற்றுக்குள் நொதிபடும்போது வெளிப்படும் குளுக்கோஸ்தான் நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. ஒருவர் சாப்பிட்ட உடன்... தேவைக்கு அதிகமாக குளுக்கோஸ் ரத்தத்தில் உயரும். அப்போது இந்த அதிகப்படியான குளுக்கோஸ் எதிர்காலத் தேவைக்காக கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கப்படும். பின் தேவைப்படும்போது, அவை மீண்டும் ரத்தத்தில் சேர்க்கப்படும். அதிகப்படியான குளுக்கோஸைச் சேமிப்பதும், சேமித்ததைத் தேவை ஏற்படும்போது பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதும் இன்சுலின். இந்த இன்சுலின் கணையத்தின் (Pancreas) லாங்கர்ஹன்ஸ் (Langerhans)பகுதியில் உள்ள பீட்டா செல்களில் சுரக்கிறது. இந்த இன்சுலின் உற்பத்தி அளவிலோ அல்லது வீரியத்திலோ குறையும்போது, அதிகப்படியான குளுக்கோஸைச் சேமிக்க முடிவது இல்லை. இதனால் ரத்தத்திலேயே குளுக்கோஸ் தங்கி, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்த நிலையைத்தான் 'சர்க்கரை நோய்’ (Diabetes)  என்கிறோம்.
03 கல்லீரல், பிட்யூட்டரி, அட்ரீனல், கார்டெக்ஸ், தைராய்டு சுரப்பி ஆகிய ஏதாவது ஒன்று இன்சுலினைச் செயல் இழக்கச் செய்யும்போதும் சர்க்கரை நோய் உண்டாகிறது. உடல் திசுக்களுக்கு இன்சுலின் அதிமாகத் தேவைப்படும்போதும் சர்க்கரை நோய் தலைதூக்கும்.
04 குடும்பத்தில் யாராவது ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், மரபியல் ரீதியாக குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர் இருவருமே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களது வாரிசுகளுக்கும் சர்க்கரை நோய்ப் பாதிப்பு வருவதற்கு 99 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. பெற்றோரில் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தால் 50 சதவிகித வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள குடும்பத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் குறிப்பிட்ட இடைவெளியில் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள் கட்டாயம் வருடத்திற்கு ஒரு முறை ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
அறிகுறிகள்
05 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் அதன் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் தெரிவது இல்லை; பல வருடங்களுக்குப் பிறகே சர்க்கரைப் பாதிப்பு இருப்பது தெரியவருகிறது. அடிக்கடி தாகம் எடுத்தல், எப்போதும் பசித்துக்கொண்டே இருத்தல் அல்லது பசியே இல்லாமல் இருத்தல், திடீரென உடல் எடைக் குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதீதச் சோர்வு, உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமடைவதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளுதல், கை - கால் மரத்துப்போதல், பார்வை மங்குதல், சிறுநீர்த் தொற்று ஏற்படுதல் போன்றவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். குழந்தைகளைப் பொறுத்த வரை, மேற்சொன்ன அறிகுறிகளோடு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பதும் சர்க்கரை நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
06     ஜி.டி.டி. (Glucose Tolerance Test) பரிசோதனை மூலம் சர்க்கரை நோயின் பாதிப்பைக் கண்டறிய முடியும். மேலும், ஹெச்.பி.ஏ.1 சி (HbA1c) பரிசோதனையின் மூலம், கடந்த மூன்று மாதங்களுக்கான ரத்தச் சர்க்கரையின் சராசரி அளவைக் கண்டறிய முடியும்.    
வகைகள்
07 டைப்1, டைப்2 என இரண்டு வகையான சர்க்கரை நோய்கள் இருக்கின்றன. கணையத்தில் இன்சுலின் முற்றிலுமாகச் சுரக்கவில்லை என்றால், அது 'டைப் 1’. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது தொற்றுநோய்க் கிருமிகளானது, இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுவதால் இது உண்டாகிறது. மூன்று மாதக் குழந்தை முதல் 16 வயது வரையிலானோருக்கு இந்த நோய் வருகிறது. 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டைப் 1 சர்க்கரை நோய் வருவது  அரிது. சர்க்கரை நோயாளிகளில் 10 சதவிகிதத்தினர் டைப் 1 நோயால் பாதிக்கப்பட்டவர்கள். போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கப்பட்ட இன்சுலின் வீரியம் நிறைந்ததாக இல்லை என்றாலோ, அது 'டைப் 2’ சர்க்கரை நோய். பெரும்பாலும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.
08 டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஊசி மூலம் செலுத்துவதால் மட்டுமே இன்சுலின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். பாதிப்பின் அளவைப் பொறுத்து தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இன்சுலின் செலுத்த வேண்டி வரலாம். தற்போது 'இன்சுலின் பம்ப்’ வந்துவிட்டது. இதைப் பொருத்திக்கொண்டால், மூன்று நாட்களுக்கான இன்சுலின் தேவையை அது கவனித்துக்கொள்ளும். இன்சுலினுடன் முறையான உணவுப் பழக்கமும் உடற்பயிற்சியும் செய்துவந்தால், டைப் 1 சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
09 டைப் 2 சர்க்கரை நோய்க்குப் பொதுவாக  இன்சுலின் தேவைப்படாது. பாதிப்பைப் பொறுத்து, மாத்திரை, உணவுப் பழக்கம், உடற்பயிற்சிகள் மூலமாகவே இதைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இந்த நோய் முற்றிய நிலையில், கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே, அந்த நிலையில் மட்டுமே இன்சுலின் தேவைப்படும்.
ஆரம்ப நிலை சர்க்கரை நோய்
10 சராசரிக்கும் சற்று அதிகமாக ரத்தத்தில் சர்க்கரை இருந்தால், அதை 'ஆரம்ப நிலை சர்க்கரை நோய்’ என்பார்கள். உடற் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உடல் எடையைக் குறைத்தல் மற்றும் மாத்திரைகள் மூலம் இதைக் குணப்படுத்த முடியும். இதைக் கண்டறிந்து குணப்படுத்தவில்லை என்றால், சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும். சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது, கட்டுக்குள் மட்டுமே வைத்திருக்க முடியும். ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதிக்க, மருத்துவமனைக்கோ, ஆய்வுக்கூடத்துக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தற்போது மிகச் சிறிய அளவில் நவீன குளுகோமீ ட்டர்கள் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே ரத்தச் சர்க்கரையின் அளவைக் கண்டறிய முடியும். சில நொடிகளிலேயே முடிவு தெரிந்துவிடும்.
கண்களையும் கவனியுங்கள்!
11 மற்றவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண் புரை நோய் அதாவது காட்ராக்ட் பாதிப்புக்கு ஆளாவார்கள். கிளாக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயால் பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகளும் இவர்களுக்கு அதிகம். பல வருடங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விழித்திரையில் (Retina)  உள்ள ரத்த நாளங்கள், முதலில் சிறிது விரிவடையும். பிறகு மெல்லிய ரத்தக் கசிவுகள்கூட ஏற்படும். நோய் முற்றிய நிலையை அடையும்போது விழித்திரையின் பாவைப் பகுதியில் நீர் கோத்துக்கொள்ளும். இதை 'மாகுலர் எடிமா’ (Macular edema) எனக் குறிப்பிடுவர். இதனால் பார்ப்பதில் பிரச்னை உண்டாகும். நாளாக நாளாகப் பார்வையை முற்றிலுமாக இழக்க நேரிடும். ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிந்தால், குணப்படுத்துவது சுலபம். விழித்திரைப் பரிசோதனை மூலம் இந்தக் குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆண்டுக்கு ஒரு முறை விழித்திரைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
12 சிறுநீரகத்தில் உள்ள சிறிய ரத்த நாளங்கள், நம் உடலில் உள்ள கழிவுப் பொருட்களைச் சுத்திகரிக்கும் பணியைச் செய்கின்றன. சர்க்கரை நோயால் இந்த ரத்த நாளங்கள் பாதிப்பு அடையும்போது, சிறுநீரகங்களால் தன்னுடைய பணியைச் சரிவர செய்ய முடியாத நிலை ஏற்படும். சர்க்கரை நோய் சிறுநீரகத்தைத் தாக்கும் ஆரம்ப நிலையில், சிறுநீரில் 'அல்புமின்’ (Albumin) எனும் புரதம் வெளிவருகிறது. இந்த நிலைக்கு 'மைக்ரோஅல்புமினூரியா’ (Microalbuminuria)  என்று பெயர். இந்தப் பாதிப்பில் எந்தவிதமான அறிகுறிகளும் தென்படாது. முறையான மருத்துவப் பரிசோதனைகள் மூலமே இதனைக் கண்டறிய முடியும். தகுந்த மருந்துகள் மற்றும் சரியான உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் இந்தக் குறைபாட்டை நிவர்த்திசெய்ய முடியும்.
13சிறுநீரக நோய் முற்றத் தொடங்கினால், சிறுநீரின் வழியாக அதிக அளவு புரதம் வெளியேறும். இந்த நிலை 'புரோட்டினூரியா’ (Proteinuria) எனப்படும். இந்த நிலையில் சிறுநீரகப் பாதிப்பை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கலாமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது. இந்தப் பாதிப்பு உச்ச நிலையை அடையும்போது, டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்பட வேண்டும். எனவே, ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க வருடத்துக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
14 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களைவிட இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, சர்க்கரை நோயாளிகள், கெட்ட கொழுப்பின் அளவு 70 மில்லி கிராம்/டெசி லிட்டருக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாரடைப்பு ஏற்படும்போது, சில சர்க்கரை நோயாளிகளுக்கு அறிகுறிகள் தென்படும். ஆனால், வலி தெரியாது, எனவே, கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்டாயம் இதயப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
15 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கால்களில் ரத்த ஓட்டம் குறைந்து, குறைவான நாடித் துடிப்போ அல்லது நாடித் துடிப்பு இல்லாமலேயோ போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. கால்களின் மேற்பகுதியில் உள்ள தோல் மிக மெல்லியதாகவும், முடிகள் இன்றியும் காணப்படும். பாதமானது உணர்ச்சியற்ற நிலைக்குத் தள்ளப்படலாம். தசைகள் பாதிக்கப்படுவதால், பாதங்கள் வளைந்து காணப்படும். இதனால், உடல் எடையைத் தாங்கும் பகுதிகளில் எலும்புகள் பாதிக்கப்பட்டு புண் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
16 சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் ரத்த ஓட்டம் தடைப்படுவதால், காயங்கள் ஏற்படும்போது வலி தெரியாது. எனவே, காயங்களைக் கவனிக்காமல் அலட்சியப் படுத்திவிடும் சாத்தியங்கள் உண்டு. கவனிக்காமல்விட்டால், நாளடைவில் இந்தக் காயங்கள் மிகப் பெரிய புண்களாக மாறிவிடக்கூடும். அப்போதும் இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், பாதிக்கப்பட்ட பகுதி களை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும். எனவே, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கால்களைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
17 தினமும் மிதமான வெந்நீரில் பாதங் களைக் கழுவித் துடைக்க வேண்டும். எப்போதும் பாதங்களை உலர்ந்த நிலையில் வைத்திருப்பது அவசியம். வீட்டில் இருந்தால்கூட நடக்கும்போது காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். இறுக்கமான காலணிகளைப் பயன்படுத்தாமல், கால்களில் சரியாகப் பொருந்தக் கூடிய காலணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏதேனும் வெடிப்புகள் அல்லது வீக்கம் இருக்கிறதா, தோல் உரிந்துள்ளதா, பாதத்தில் நிற மாற்றம் இருக்கிறதா, புண்கள் உள்ளதா என அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். இதுபோன்ற மாற்றங்கள் ஏதாவது தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவதன் மூலம் பெரிய பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
கர்ப்ப காலச் சர்க்கரை நோய்
18 கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தற்காலிகச் சர்க்கரை நோய் பாதிப்பு வரலாம். கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியில் குழந்தையின் வளர்ச்சிக்காக சில ஹார்மோன்கள் சுரக்கும். அந்த ஹார்மோன்கள் இன்சுலின் சுரப்பதைப் பாதிப்பதால், அவர் களுக்கு சர்க்கரை நோய் வரலாம். கர்ப்பம் மட்டுமல்லாமல், மரபியல், உடற்பருமன் என்று வேறு சில பிரச்னைகள் காரணமாகவும் இந்தப் பாதிப்பு வரக்கூடும். மற்ற நாட்டுப் பெண்களுடன் ஒப்பிடும்போது இந்தியப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தக் காலத்தில் ஏற்படக்கூடிய சர்க்கரை நோயைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால், கருவில் உள்ள குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கும். இதனால் கருச்சிதைவு, கர்ப்ப காலத்தில் உயிர் இழப்பு அல்லது குறைப் பிரசவம் என்றுகூட விபரீதமாகலாம். எனவே, ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை (GTT) மற்றும் வாய் வழியாகக் குளுக்கோஸைக் குடிக்கக் கொடுத்துக் கண்டறியும் பரிசோதனையான ஓ.ஜி.டி.டி. (OGTT) மூலம் கர்ப்ப கால சர்க்கரை நோயைக் கண்டுபிடித்து முன்கூட்டியே தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இந்த வகைச் சர்க்கரை நோயானது பெரும்பாலும் பிரசவத்துக்குப் பின்னர் சரியாகிவிடும்.  
செக்ஸ்
19 சாதாரணமானவர்களைவிட, சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு தாம்பத்யக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். தாம்பத்யத்தில் நரம்புகளின் செயல்பாடுகளுக்குப் பெரும் பங்கு உண்டு. இந்த நோயைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால், ஆண்களுக்கு விறைப்பின்மைகூட உண்டாகலாம். பெண்களுக்கு, பிறப்பு உறுப்பில் வறட்சி, தாம்பத்யத்தின்போது அதிக வலி, ரத்தம் கசிதல், உணர்ச்சி இன்மை போன்ற பிரச்னைகள் உருவாக சாத்தியங்கள் உள்ளன.
20 உங்களின் உயரத்துக்கு ஏற்ற சரியான உடல் எடையைப் பராமரியுங்கள். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்கள் தங்களுடைய உடல் எடையை 10 சதவிகிதம் குறைப்பதன் மூலம் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை 50 சதவிகிதம் வரை தள்ளிப்போட முடியும். அதற்காக ஒரேயடியாக எடையைக் குறைக்க வேண்டியது இல்லை. படிப்படியாகக் குறைத்தாலே போதும்.
உணவுப் பழக்கம்
21 சர்க்கரை நோய் வராமல் தடுக்க, கார்போஹைட்ரேட் நிரம்பிய உணவு வகைகளைக் குறைத்து, புரதம் நிரம்பிய உணவு வகைகளையும், காய்கறி - பழங்களையும் அதிகமாகச் சாப்பிட வேண்டும். கொழுப்பு உள்ள உணவுகளை மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். இறைச்சியில் இருந்து கிடைக்கும் புரதத்தைவிட பருப்பு மற்றும் பயறு வகைகளில் இருந்து கிடைக்கும் புரதம் சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உதவி புரிகின்றன. தானியங்கள் மற்றும் பயறு வகைகள், காய்கறிகள், கீரைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
22சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் வெந்தயம் துணை மருந்தாகப் பயன்படுகிறது. வெந்தயத்தை ஊறவைத்தோ,  முளை கட்டியோ, பொடியாக்கியோ உட்கொள்ளலாம்.
23 வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நிச்சயம் தவிர்த்துவிட வேண்டும். சாக்லேட், ஐஸ்க்ரீம், சிப்ஸ் போன்ற வற்றுக்கும் குட்பை சொல்லிவிடுங்கள்.
24 டி.வி. பார்த்துக்கொண்டே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், டி.வி. நிகழ்ச்சிகளில் மனம் ஒன்றிப்போகும்போது, சாப்பிடும் உணவின் அளவு தெரியாமல் நாம் உள்ளே தள்ளிக்கொண்டே இருப்போம். எனவே, வேறு வேலைகளில் கவனம் செலுத்தாமல் அளவோடு உண்ண வேண்டும். உணவை நன்றாக மென்று உள்ளே தள்ளும்போதுதான் வயிறு நிறையும் உணர்வு ஏற்படுகிறது. எனவே, நிதானமாக மென்று, ரசித்து, ருசித்துச் சாப்பிடுங்கள். கிழங்கு வகைகளைக் குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி
25அதீத உடல் எடையைக் குறைப்பதோடு, ரத்தச் சர்க்கரையையும் கட்டுப்படுத்தும் பணியைச் செய்ய வல்லது உடற்பயிற்சி. நடை, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், நடனம், குழு விளையாட்டுகள் என எதில் வேண்டுமானாலும் நீங்கள் ஈடுபடலாம். தினமும் குறைந்தது அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்யலாம். ஆனால், உடற்பயிற்சியைத் துவங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற பயிற்சி எது என்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். கடினமான பயிற்சிகளைத்தான் செய்ய வேண்டும் என்பது கிடையாது. சுறுசுறுப்பான நடைப்பயிற்சிகூட சிறந்ததுதான். ஆரம்பத்தில் குறைவான தூரம் நடக்க ஆரம்பித்து, பின்னர் படிப்படியாகத் தூரத்தை அதிகப்படுத்தலாம். குழந்தைகளை வீட்டுக்குள்ளே அடைத்துவைக்காமல் விளையாட அனுமதியுங்கள்.
நல்லதே நினைப்போம்... நலமாய் இருப்போம்!

கர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'!

கர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'!
'சரியா பல் தேய்ச்சியா..?’
- இது தினசரி, இல்லந்தோறும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் நடத்தும் சுகாதார பாலபாடம். இந்தப் பல் பாடம், பாலகர்களுக்கு மட்டுமல்ல; குழந்தையைப் பிரசவிக்கக் காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்கும்தான்!
'பல் சுகாதாரத்தை கர்ப்பிணிகள் அலட்சியப்படுத்தினால்... பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது!’ என்று எச்சரிக்கின்றன, வாய்க்குழி சுகாதாரத்துக்காக 'வாய்ஸ்' கொடுத்துவரும் சர்வதேச அமைப்புகள்.
இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த பல் பாதுகாப்பு சிறப்பு மருத்துவரான என்.குருச்சரண் விரிவாகப் பேசுகிறார்...
'அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீரியோடண்டாலஜி (American Academy of Periodontology) என்கிற ஈறு நோய்கள் மற்றும் சுகாதாரத்துக்கான அமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்தகைய எச்சரிக்கையை எழுப்பி வருகிறது!
குணப்படுத்த முடியாத ஈறு வியாதியுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறைப்பிரசவமும், எடை குறைவான குழந்தைகள் பிறக்கவும் ஏழு மடங்கு அதிக வாய்ப்புகள் உருவாவதாக அந்த அமைப்பின் ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது.
இந்த ஈறு வியாதி, கர்ப்பிணிகளின் உடலில் சில உயிர்ம திரவங்களின் அளவை அதிகரிப்பதுதான், குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான காரணம்.
ஈறு வியாதியை உண்டாக்கும் 'போர்ஃபிரோ மோனஸ் ஜிஞ்ஜிவாலிஸ்’ (Porphyromonas Gingivalis) என்ற பாக்டீரியா, கர்ப்பிணியின் வயிற்றில் பனிக்குட நீரில் இருப்பது, 2007-ம் ஆண்டில் டாக்டர்களால் கண்டறியப்பட்டது. அதன் பிறகுதான் கர்ப்பிணிகளுக்கான ஈறு சுகாதாரம் பற்றிய விழிப்பு உணர்வை, மேலைநாடுகள் துரிதப்படுத்தின. ஆனால், அடிப்படை சுகாதாரத்துக்கே அல்லாடும் நம் நாட்டில் ஈறு பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வோ, அக்கறையோ இன்னமும் ஏற்படவில்லை. ஈறு பாதிப்பால் உருவாகும் பாக்டீரியா, 'எக்லாம்சியா’ (Eclampsia) என்கிற வலிப்பு நோயையும் உருவாக்கக்கூடியது.
ஈறு கோளாறு உள்ளவர்களின் ரத்தத்தில் 'சி ரியாக்டிவ் புரோட்டீன்' (C-Reactive Protein) என்கிற கெடுதலை உண்டு பண்ணும் புரோட்டீனின் அளவு, 65 சதவிகிதம் அதிகமாகக் காணப்படுவதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.
கர்ப்பக் காலத்தின்போது பெண்களைப் பாதிக்கும் சர்க்கரை நோயை அதிகமாக தூண்டிவிடுவதோடு, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியையும்  இந்த ஈறு கோளாறின் கூறுகள் கடினமாக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது!' என்ற குருச்சரண்,
''என்ன, இதையெல்லாம் கேட்டுவிட்டு திகிலடைந்துவிட்டீர்களா? அதற்காக நான் இதைச் சொல்லவில்லை... திகில் அடையவும் தேவையில்லை. எந்த அளவுக்கு சுகாதாரமாக நாம் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாகவே இதைச் சொல்கிறேன்'' என்று சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.
''வாய்க்குழி சுகாதாரம் என்பதில் பல், ஈறு, நாக்கு போன்றவற்றின் சுகாதாரமும் உள்ளடங்கி இருக்கிறது. பெரும்பாலானோர் பல் தேய்ப்பதையே கடமையாக நினைக்கிறார்கள். 'சாதாரண ஈறு பாதிப்புத்தானே’ என அசமந்தமாக இருந்துவிடுவதால் குறைப்பிரசவம் நிகழவும், எடை குறைவாக குழந்தை பிறக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். பிறவிக் கோளாறுகள்கூட ஏற்படலாம்.
இதையெல்லாம் கேட்டு பயப்படத் தேவையில்லை. தினமும் ஈறுகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது பெரிய சிரமம் இல்லையே..! அத்தகைய எளிதான முயற்சிகளைக்கூட செய்யாமல் பெரிய விளைவுகளுக்கு நாமே நம்மை ஆளாக்கிக் கொள்ளக் கூடாது'' என்றவர், விளைவுகளைத் தடுக்கும் வழிமுறைகளையும் சொல்லத் தொடங்கினார்...
''18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குதான் ஞானப்பல் எனப்படும் மூன்றாவது கடைவாய்ப்பல் முளைக்கத் தொடங்கும். சாப்பிடும்போது, பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையிலான 'கேப்’பில் உணவுப் பொருட்கள் சிக்கிக்கொள்ளும். பல் துலக்கும்போது அவை சரியாக அகப்படாது. இதனால், ஈறில் கிருமிகள் உருவாகி சீழ் ஏற்படும். ஆகவே, ஞானப்பல் முளைக்கும் தருணத்தில், கர்ப்பம் தரிக்க நேரிட்டால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பொதுவாக, பல் மற்றும் ஈறு சிகிச்சைக்காகத் தரப்படும் சில வலி நிவாரணி மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மிகவும் வீரியமானவை. மாத்திரை, மருந்துகளால் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதை மனதில் கொண்டு, தாயாகப் போகும் பெண்கள், குடும்ப வாரிசுக்காகத் திட்டமிடும்போதே குழந்தைக்கான இடைவெளி, உடல் ஆரோக்கியம், குடும்பப் பொருளாதாரம் போன்ற அம்சங்களுடன் முன்னெச்சரிக்கையுடன் பல் சொத்தை பிரச்னையையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது'’ என்றவர் ஈறு பராமரிப்புக்காக பட்டியலிட்ட டிப்ஸ்கள் பெட்டி செய்தியில்!

ஈறுகளை பராமரிப்பது எப்படி?
காலை, இரவு இருவேளையும் பல் துலக்க வேண்டும்.
 இரவில் வாய்மூடி தூங்கும்போது வாய்க்குழியில் ஆக்ஸிஜன் இருப்பு குறைந்துவிடும். அந்த இடத்தில் அனரோபிக் பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருக்கும். பல் மற்றும் ஈறு இடுக்குகளில் இருக்கும் உணவுத் துகளில் செயல்படும் இந்த வகை பாக்டீரியாவினால், ஈறுகள் சீக்கிரத்திலேயே சீரழிந்துவிடும். ஒவ்வொரு முறை திடமான மற்றும் திரவமான உணவுகளை சாப்பிட்டவுடன், வாய்க் கொப்பளிப்பது அவசியம்.

உணவுத்துகள் சிக்கிக் கொண்டால், கையில் கிடைத்த குச்சியை வைத்து சிலர் பல், ஈறுகளை பாடாய்ப்படுத்திவிடுவார்கள். அவசியமெனில், இதற்கென பிரத்யேகமாக இருக்கும் நூல் போன்ற டென்டல் ஃபிளாஸ் (Dental Floss) கொண்டு எளிமையாக பல் இடுக்குகளை தூய்மைபடுத்தலாம்.
நாக்கை எப்போதும் சுத்தமாக வைத் திருக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு நாக்கில் ஏதாவது படிமானம் தேங்கி இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் இரும்புச்சத்து மருந்துகள் இந்தப் படி மானத்தின் தடிமனை மேலும் அதிகரிக்க  செய்து, நாக்கின் மேல் பகுதியை கிருமிகளுக்குப் புகலிடமாக்கிவிடும்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று பல், ஈறு, வாய் இவற்றை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
கர்ப்பக் காலத்தின் முதல் மூன்று மாதங்களில் சொத்தைப்பல் எடுப்பது கூடவே கூடாது.

'கும்'முனு தூக்குது... கோங்கூரா ஃப்ரை!

'கும்'முனு தூக்குது... கோங்கூரா ஃப்ரை!
 ஜவ்வரிசி அடை
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், பொட்டுக்கடலை - அரை கப் (மாவாக அரைக்கவும்), அரிசி மாவு, கேரட் துருவல் - தலா அரை கப், நறுக்கிய வெங்காயம் - 4, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தேவையான அளவு, தேங்காய் துருவல், நெய் - தலா கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை தோசைக்கல்லில் அடை போல மெல்லியதாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
இதை வெல்லம் அல்லது ஏதாவது ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.
- மாலதி நாராயணன், பெங்களூரு
பேபிகார்ன் - கோங்கூரா ஃப்ரை
தேவையானவை: பேபிகார்ன் - 5, நறுக்கிய கோங்கூரா (புளிச்ச கீரை) - ஒரு கப், பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், ரொட்டித்தூள் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், மிளகை வறுக்கவும். பிறகு, பூண்டு, கோங்கூரா கீரையை வதக்கவும். வறுத்ததையும், வதக்கியதையும் சேர்த்து விழுதாக அரைத்து, உப்பு சேர்க்கவும். பேபிகார்னை நீளவாக்கில் நறுக்கி, அரைத்து வைத்துள்ள கோங்கூரா விழுதை தடவி சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பேபிகார்னை ரொட்டி தூளில் புரட்டி, பொன்னிறமாக பொரிக்கவும்.
- விஜயலட்சுமி, பெங்களூரு
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...
ஜவ்வரிசி அடை: சிறிதளவு வேர்க்கடலையை வறுத்துப் பொடித்து சேர்த்தால், சுவை அதிகரிக்கும்.
பேபிகார்ன் - கோங்கூரா ஃப்ரை: கோங்கூரா இல்லையென்றால், அதற்குப் பதிலாக புதினா மற்றும் கொத்தமல்லியை அரைத்து சேர்த்தும் செய்யலாம்.

30 வகை இடியாப்பம்

30 வகை இடியாப்பம்
எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளில் இடியாப்பத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அதற்காக இடியாப்பத்தையே மீண்டும் மீண்டும் செய்து பரிமாறினால், அலுப்பு தட்டிவிடும் என்பதும் உண்மைதானே! இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ, இடியாப்பத்தில் 30 வகை சுவையான ரெசிபிகளை இங்கே பரிமாறும் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா,
''பருப்பு உசிலி இடியாப்பம், பாஸந்தி இடியாப்பம், டிரைஃப்ரூட் இடியாப்பம் என்று வெரைட்டியாக கொடுத்துள்ளேன்... செய்து பரிமாறி பாராட்டுகளை அள்ளுங்கள்'' என்று உற்சாகமூட்டுகிறார்.
குறிப்பு: 30 ரெசிபிகளுக்கும் இடியாப்பம் தயாரிக்கும் முறை ஒன்றுதான். எனவே, முதலில் சொல்லப்பட்டிருக்கும் இனிப்பு இடியாப்ப ரெசிபியில் இருப்பது போலவே, அனைத்து ரெசிபிகளுக்கும் இடியாப்பத்தைத் தயாரித்துக் கொள்ளவும்.

இனிப்பு இடியாப்பம்
தேவையானவை:  வெல்லம், இட்லி அரிசி - தலா 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், நல்லெண்ணெய் ­- ஒரு டீஸ்பூன்,  ஏலக்காய்த்தூள், உப்பு - சிறிதளவு.
இடியாப்பம் செய்முறை: இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெயை விட்டு, கரைத்து வைத்து இருக்கும் மாவை ஊற்றி, கெட்டியாகக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). மாவு வெந்ததும் நன்கு பிசையவும். மாவை சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டவும். அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போடவும் (உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்). உருண்டைகள் வெந்ததும் எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும் (உருண்டைகளை சரிபாதியாக 'கட்’ செய்து பார்த்தால், மாவு வெள்ளையாக தெரியக்கூடாது. அதுதான் சரியான பதம். மாவு தெரிந்தால் மேலும் சிறிது நேரம் வேகவிட வேண்டும்).
செய்முறை: வெல்லத்தைக் கரைத்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, பாகு காய்ச்சவும். பாகை தண்ணீரில் விட்டு பார்த்தால் உருட்ட வரவேண்டும் இதுதான் சரியான பதம். பாகு ஆறியதும் இடியாப்பத்தை அதில் சேர்த்து... ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

புளியோதரை இடியாப்பம்
தேவையானவை:  இட்லி அரிசி - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 7, புளி - 50 கிரம், வறுத்த வேர்க்கடலை - 25 கிராம், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், விரலி மஞ்சள் - ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), பொடித்த வெல்லம் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறி வேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் (புளிக்காய்ச்சலுக்கு) - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை, பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வெறும் வாணலியில் வெந்தயம், 2 காய்ந்த மிளகாய், தனியா, மஞ்சள் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண் ணெய் விட்டு, கடுகு தாளித்து, 5 காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, கடலைப்பருப்பு, வறுத்த வேர்க்கடலை சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். புளியை தேவையான தண்ணீர்விட்டு கரைத்து சேர்த்து, உப்பு சேர்த்து, கொதிக்கவிடவும். வறுத்து அரைத்து வைத்திருக் கும் பொடியை இதனுடன் சேர்த்து, வெல்லம் சேர்த்து கெட்டியானவுடன் இறக்கினால்.. புளிக்காய்ச்சல் தயார்.
இடியாப்பத்துடன் புளிக்காய்ச்சல் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: கடைகளில் கிடைக்கும் புளியோதரை மிக்ஸ், புளியோதரைப் பொடி சேர்த்தும் செய்யலாம்.

தேங்காய் துருவல் இடியாப்பம்
தேவையானவை:  இட்லி அரிசி - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் (10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்), பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, இடியாப்பத்துடன் கலந்து, வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்க்கவும்.
குறிப்பு: முந்திரி, பொட்டுக்கடலை சேர்த்தும் இதை தயாரிக்கலாம்.

 வெஜிடபிள் இடியாப்பம்
தேவையானவை:  இட்லி அரிசி - 200 கிராம், கேரட் துருவல், வெங்காயத்தாள்  (பொடியாக நறுக்கியது), கோஸ் துருவல் - தலா ஒரு கப், பச்சை மிளகாய்  - ஒன்று (பொடியாக நறுக்கவும்), நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு, கேரட் துருவல், நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன், கோஸ் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து... சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பிழிந்து வைத்திருக்கும் இடியாப் பத்துடன் வதக்கிய காய்கறி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

 தக்காளி இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி, தக்காளி - தலா 200 கிராம்,  இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்கவும். பிறகு, இதை இடியாப்பத்துடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

 மிளகு  சீரக இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 200 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை (பொடியாக நறுக்கவும்) - சிறிதளவு, நல்லெண்ணெய் ­- ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு... மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூளை வறுத்து, இடியாப்பத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். நறுக்கிய கறிவேப்பிலையை மேலே தூவவும்.
குறிப்பு: மசாலா வாசனை விருப்பம் உடையவர்கள், கரம் மசாலாத்தூள் தூவியும் கலக்கலாம்.

 முந்திரி  சர்க்கரை இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், முந்திரிப்பருப்பு - 20, சர்க்கரை - ஒரு கப், நெய், நல்லெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
பொடித்த முந்திரிப்பருப்பு, பொடித்த சர்க்கரையை இடியாப்பத்துடன் சேர்த்துக் கலந்து, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: வளரும் குழந்தைகளுக்கு இந்த இடியாப்பம் மிகவும் நல்லது. பாதாம், பிஸ்தா பொடித்தும் சேர்க்கலாம்.

 ஜீரண இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 200 கிராம், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி... மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் போட்டு, இடியாப்பத்தை சேர்த்து நன்கு கலக்கி, பரிமாறவும்.
குறிப்பு: நறுக்கிய கொத்தமல்லி, புதினா தூவி கலந்து சாப்பிடலாம்.

 புதினா இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, கடுகு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு சூடானதும், கடுகு சேர்த்து, வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை தாளித்து... பொடியாக நறுக்கிய புதினா இலை சேர்த்து வதக்கவும். இடியாப்பத்துடன் சிறிது நெய் சேர்த்து, வதக்கியதையும் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
குறிப்பு: சிறிதளவு வேர்க்கடலை, முந்திரி வறுத்து சேர்க்கலாம்.

 டிரைஃப்ரூட் இடியாப்பம்
தேவையானவை:  இட்லி அரிசி - 250 கிராம், பாதாம் பருப்பு - 4, முந்திரிப்பருப்பு - 10, பேரீச்சம்பழம் - 4, பிஸ்தாபருப்பு, உலர்ந்த திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
பாதாமை உடைத்து இடியாப்பத்துடன் சேர்த்து, முந்திரி, பிஸ்தாவை நெய்யில் வறுத்துப் போட்டு,  பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு, ஏலக்காய்த்தூள், உலர்ந்த திராட்சை சேர்த்து, சிறிது நெய் விட்டு கலக்கவும்.
குறிப்பு: ட்ரைஃப்ரூட்ஸை அரைத்தும் கலக்கலாம். பொடித்து சேர்த்தும் கலக்கலாம்.

 காப்ஸிகம்  ஆனியன் இடியாப்பம்
தேவையானவை:  இட்லி அரிசி - 250 கிராம், குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய குடமிளகாய், வெங்காயம் சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கி, இடியாப்பத்துடன் கலக்கவும்.

 பைனாப்பிள் இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், பைனாப்பிள் - 10 ஸ்லைஸ், நெய்யில் வறுத்த முந்திரி - 10, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
பைனாப்பிளை தோல் சீவி நறுக்கி, அரைத்து, இடியாப்பத்துடன் கலக்கவும். வறுத்த முந்திரி சேர்க்கவும்.

 உருளை மசாலா இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், உருளைக்கிழங்கு - இரண்டு, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
உருளைக்கிழங்கை பொடி யாக நறுக்கவும். வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உருளைக் கிழங்கை சேர்த்து உப்பு, மிள காய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி இறக்கவும். இடியாப்பத்துடன் உருளை மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு:இடியாப்பம் செய் யும்போது... மாவு உருண்டை களை எடுத்த பிறகு, பாத்திரத் தில் இருக்கும் மாவு கலந்த நீருடன் உப்பு, மோர், நறுக்கிய சின்ன வெங்காயம் சிறிதளவு சேர்த்தால்... வெயிலுக்கு பதமான கஞ்சி தயார்.

 எள்ளுப்பொடி இடியாப்பம்
தேவையானவை:  இட்லி அரிசி - 250 கிராம், எள் - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு, எள், காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடிக்கவும். இடியாப்பத்துடன் நெய் விட்டு, பொடியை சேர்த்துக் கலக்கவும்.

 பருப்பு உசிலி இடியாப்பம்
தேவையானவை:  இட்லி அரிசி - 250 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, நல்லெண்ணெய் (பருப்பு உசிலிக்கு) - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடிக்கட்டி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பருப்பு விழுது சேர்த்து, உதிரி உதிரியாக வருமாறு மிதமான தீயில் வைத்துக் கிளறி, இடியாப்பத்துடன் கலக்கவும்.
குறிப்பு: கொள்ளு சேர்த்தும் தயாரிக்கலாம்.

 தேங்காய்ப்பால் இடியாப்பம்
தேவையானவை:  இட்லி அரிசி - 250 கிராம், தேங்காய்ப்பால் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடித்த வெல்லம் - ஒரு கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை:  இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
தேங்காய்ப்பாலுடன் வெல்லம் சேர்த்து லேசாக சூடாக்கி, ஏலக்காய்த்துள் சேர்க்கவும். இதை இடியாப்பத்துடன் கலக்கவும்.

 ஃப்ரெஷ் ஃப்ரூட்ஸ் இடியாப்பம்
தேவையானவை:  இட்லி அரிசி - 250 கிராம், வாழைப்பழம் - ஒன்று, திராட்சை - 10, மாதுளை முத்துக்கள் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய ஆப்பிள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை:  இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வாழைப்பழம், மாதுளை முத்துக்கள், திராட்சை, நறுக்கிய ஆப்பிள் ஆகியவற்றை இடியாப்பத்துடன் கலந்து பரிமாறவும்.

 லெமன் இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், எலுமிச்சம்பழம் - ஒன்று, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும். 
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, பொட்டுக் கடலை, பெருங்காயத்தூள் சேர்த்து, எலுமிச்சைச் சாறு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... இதை  இடியாப்பத்துடன் கலக்கவும்.
குறிப்பு: எலுமிச்சைச் சாறுக்குப் பதில் துருவிய மாங்காய் போட்டும் கலக்கலாம்.

 மோர்க்குழம்பு இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், புளிக்காத தயிர் - 500 மில்லி, தனியா, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - இரண்டு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு சிறிய கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், துவரம்பருப்பு, அரிசி ஆகியவற்றை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தயிரைக் கடைந்து, அரைத்ததை சேர்த்து, உப்பு சேர்த்து லேசாக சூடுபடுத்தவும் (கொதிக்க வைக்கக் கூடாது). இந்த மோர்க்குழம்புடன் இடியாப்பத்தை சேர்த்துக் கலக்கி, பரிமாறவும்.
குறிப்பு: வெண்டைக்காயை நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கி, குழம்புடன் சேர்க்கலாம்.

 லஸ்ஸி இடியாப்பம்
தேவையானவை:  இட்லி அரிசி - 250 கிராம், புளிக்காத தயிர் - 250 மில்லி, சர்க்கரை - 6 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
சாப்பிடுவதற்கு சற்று முன்பு தயிர், சர்க்கரையை சேர்த்து, இடியாப்பத்துடன் கலக்கி பரிமாறவும்.

 ஸ்ட்ராபெர்ரி இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், ஸ்ட்ராபெர்ரி - 10, இஞ்சி - ஒரு சிறு துண்டு, நெய் - 4 டீஸ்பூன்,  பேரீச்சம்பழம் - ஒன்று, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை:  இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
ஸ்ட்ராபெர்ரி, இஞ்சியை தோல் சீவி நறுக்கி போட்டு, பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் நெய் விட்டு அரைத்ததை போட்டு வதக்கி, சர்க்கரை சேர்த்து கிளறி, இடியாப்பத்துடன் கலக்கவும்.

 மாம்பழ ஸ்குவாஷ் இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், மாம்பழம் - ஒன்று, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
மாம்பழத்தை தோல் சீவி நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். இதை இடியாப்பத்துடன் கலக்கி பரிமாறவும்.

 பாஸந்தி இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
பாலை சிறிது சிறிதாக ஆடை படியும்படி காய்ச்சி, ஆடைகளை எடுத்து வைத்து, பால் 250 மில்லி ஆக சுண்டக் காய்ந்ததும் பால் ஆடை, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இடியாப்பத்துடன் பாஸந்தியை சேர்த்துக் கலக்கவும். மேலே குங்குமப்பூ தூவவும்.

 வேர்க்கடலை இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், வறுத்த வேர்க்கடலை - 200 கிராம், நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையை லேசாக பொடித்து, கொஞ்சம் உப்பு சேர்த்து, இடியாப்பத்துடன் சேர்த்து, நெய் விட்டு கலக்கவும்.

 மல்டி தானிய பொடி இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், துவரம்பருப்பு, கொள்ளு - தலா 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வெறும் வாணலியில் கொள்ளு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்துக் கலந்து, இடியாப்பத்தின் மேல் தூவி நெய் விட்டுக் கலக்கவும்.

 தேங்காய்ப்பால் சொதி இடியாப்பம்
தேவையானவை: தேங்காய்ப்பால் - 100 மில்லி, இட்லி அரிசி - 250 கிராம், நீளவாக்கில் நறுக்கிய பீன்ஸ் - 10 துண்டுகள், நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய கேரட் - 10 துண்டுகள், நீளவாக்கில் நறுக்கிய குடமிளகாய்  - சிறிதளவு, நெய், நல்லெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய், கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப் பது போல தயாரித்துக் கொள்ளவும்.
பீன்ஸ், கேரட், குடமிளகாயை நெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து, வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து சேர்க்கவும். ஒரு கொதி வந்தததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சாப்பிடும் நேரத்தில் இதை இடியாப்பத்துடன் கலந்து கொடுக்கவும்.

 கத்திரிக்காய் இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், கத்திரிக்காய் - நான்கு (நறுக்கிக் கொள்ளவும்)  பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் தாளித்து... நறுக்கிய கத்திரிக்காயைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். வதக்கிய கத்திரிக்காய் கலவையை இடியாப் பத்துடன் சேர்த்து, பொடியையும் தூவி நன்றாகக் கலக்கவும்.

 மாங்காய் இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், மாங்காய் - ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
மாங்காயை, கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு கடுகு போட்டு, வெடித்ததும் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மாங்காய் துருவலை சேர்த்து, தேவையான உப்பு போட்டு, நன்றாக வதக்கி... இடியாப்பத்துடன் சேர்த்துக் கிளறவும்.

 உளுந்து இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
உளுத்தம்பருப்பை ஊற வைத்து, களைந்து, வடிகட்டி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இட்லித் தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி, அரைத்த உளுத்தம்பருப்பை வேகவிட்டு எடுக்கவும். அதை ஒரு தட்டில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து, உதிர்த்த உளுந்தை சேர்த்துக் கிளறவும். இதை இடியாப்பத்துடன் சேர்த்து, நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.

 கீரை இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை - தலா ஒரு கப், நறுக்கிய புதினா, முள்ளங்கி இலை - தலா ஒரு கைப்பிடி அளவு, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், வெந்தயக்கீரை  புதினா, முள்ளங்கி இலைகளை சேர்த்து, உப்பு போட்டு வதக்கி இடியாப்பத்துடன் கலக்கவும்.
குறிப்பு: முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிகீரை என எந்த கீரையிலும் இதே முறையில் தயாரிக்கலாம்.
தொகுப்பு: பத்மினிபடங்கள்: எம்.உசேன்ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி

ஆச்சி கிச்சன் ராணி
ப்ரான் கோலா கிரேவி
தேவையானவை: சுத்தம் செய்த இறால் - அரை கிலோ, கடலை மாவு - அரை கப், சின்ன வெங்காயம் - 100 கிராம், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, ஆச்சி மீன் வறுவல் மசாலா - 50 கிராம், ஆச்சி மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், ஆச்சி மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஆச்சி மஞ்சள் தூள் - சிறிதளவு, சோம்பு, சீரகம், கசகசா -     தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுத்தம் செய்த இறாலை வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்து தனியே வைக்கவும். சின்ன வெங்காயம், சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன் ஆச்சி மீன் வறுவல் மசாலா, ஆச்சி மிளகுத்தூள், இஞ்சி - பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், அரைத்து வைத்த வெங்காய விழுது, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு திக்கான மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒவ்வொரு இறாலாக தனியாக எடுத்து மாவுடன் உருட்டி, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுது, ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி, தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பின்னர், அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் கலந்து, கொதி வந்ததும் பொரித்த இறால் உருண்டைகளை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து வேகவிடவும். பிறகு, கொத்தமல்லி தூவி இறக்கினால்... சுவையான ப்ரான் கோலா கிரேவி ரெடி!