Saturday, September 29, 2018

பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?


பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப்படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப்பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.

சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும் படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது

பூஜை அறையில் சாமி படங்களை வைக்கும் சாஸ்திர முறைகள்


பூஜை அறையில் சாமி படங்களை வைக்கும் சாஸ்திர முறைகள்
பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது பத்னியுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி மற்றும் லலிதாம்பாள், அஷ்டலக்ஷ்மி இது தவர பானலிங்கம், சிவலிங்கம், (ஒரு ஜான் அளவு அதற்கு மேல் போக கூடாது).

வைக்கக்கூடாத படங்கள் – (உக்கிர வடிவம் கொண்ட ஸ்ரீ காளியம்மன், மகிஷாசுர மர்த்தினி, ஆஞ்சநேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த
கிருஷ்ணர், முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரப மூர்த்தி போன்ற உக்கிர படங்கள் வைக்க கூடாது. (உக்கிர தெய்வங்கள் நமது குல
தெய்வமாக இருக்கும் பட்சத்தில் அந்த சாமி படங்களை மட்டும் வைக்கலாம்.)

ஆகம நெறிகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே இப்படங்களை வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் உடைந்த படங்கள், சிதைந்த சாமி சிலைகள் இவைகளை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது. சமுத்திரத்திலோ ஆற்றிலோ கோவில்களிலோ அல்லது ஏரியிலோ விட்டுவிட வேண்டும்.

நமது முன்னோர்கள் படங்களை தனியாக இருக்கவேண்டும் பூஜை அறையில் சாமிக்கு நிகராக வைக்க கூடாது.

ஒரு ஜான் (கட்டை விரல் அளவு) மேல் உள்ள விக்கிரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட
வேண்டும். தினசரியோ அல்லது வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்த்திரம் தெரிவிக்கிறது. மேரு, ஸ்ரீசக்ரம், மற்றும் யந்திரங்கள் இவைகளை முறைப்படி உபதேசம் வாங்கிக்கொண்டு ஜபம், தியானம் செய்வதாக இருந்தால் மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும்.

தவறினால் சில யந்திரங்கள் விபரீதமான கெடுபலங்களை தரும். சக்தி உபாசகர்கள் மட்டுமே ஸ்ரீ சக்ரம், மேரு வைத்து பூஜிக்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் அந்த சங்கில் அரிசியோ அல்லது ஜலமோ வைத்து பூஜிக்க வேண்டும். சங்கை காலியாக வைக்கலாகாது. சங்கை எதுவும் போடாமல் இருக்கும் பட்சத்தில் கமுத்தி வைக்கலாம். சங்கின் நுனி கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.



வீட்டில் செல்வம் சேருவதற்கான பூஜை குறிப்புகள்!


வீட்டில் செல்வம் சேருவதற்கான பூஜை குறிப்புகள்! 

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.
4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.
6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.
7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.
8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.
10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.
13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.
14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.
17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.
20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.
24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.
25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.
26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும் போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.
29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.
32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.
33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.
34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவது தான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.
35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.
37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.
38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.
39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.
40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.

41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜெபங்கள் செய்யக்கூடாது.
42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.
43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.
46. தெய்வப் படம், குத்து விளக்குகள் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.
47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்..
48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப் பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.
49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும் போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப் படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.
53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.
57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில் தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.
59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.
60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில் தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.

61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.
64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.
65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.
66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.
67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.
68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.
70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.
72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.
79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும் போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

வடக்குத் திசை குபேரனை வணங்கினால், செல்வ வளம் பெருகுமா?


வடக்குத் திசை குபேரனை வணங்கினால், செல்வ வளம் பெருகுமா?

பணம் தாராளமாக நம் கைகளில் புழங்க வேண்டுமானால், என்ன வகையான வாஸ்து 

மற்றும் பூஜை முறைகளைக் கையாள வேண்டும். 

கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருங்க அமையப்பெற்றவர்தான் சாதனையாளராக உயர முடியும் என்பது நிச்சயம்.
திருமகளோ தனக்கு முன்பாகச் செல்வத்தைக் கொட்டி வைத்திருக்கின்றாள். ஆனால், அவளுடைய அருளால் அதை நாம் எப்படிப் பெறுவது என்பதில்தான் நமக்குக் குழப்பம். இங்கேதான் நமக்கு வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது.
பணப்பெட்டி மற்றும் பீரோ வைக்கும் முறைகள்!
வடமேற்கில் பீரோ, பணப்பெட்டி முதலியவை இருந்தால், பணம் வருவதும், போவதுமாக இருப்பதுடன், சேமிக்க முடியாததுடன் கடன்காரனாகவும் மாற்றி துன்பப்பட வைக்கும்.
தென்கிழக்கில் பணப்பெட்டி இருக்குமேயானால், விரயச் செலவுகளையும், கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காத தன்மையையும் ஏற்படுத்தும். ஏமாற்றப்படுவார்கள்.
கிழக்கில் பீரோ இருக்குமாயின் பணம் பல வழிகளில் வந்தாலும், நோய்க்குச் செலவு செய்வதில் பெரும்பகுதியும், குழந்தைகளின் தவறான செயல்களினால் பெரும்தொகையுமாக வீண் செலவுகளை ஏற்படுத்தும். வீட்டில் கவலை குடிகொள்ளும்.
தெற்குப் பார்த்த வீட்டின் வடக்குச் சுவர் ஓரமாக, தெற்குப் பார்த்து பீரோ வைத்திருப்பவர்கள் வீட்டில், பெண்களுக்கு வைத்திய செலவை அதிகப்படுத்தும்.
மேற்குப் பார்த்த வீட்டுக்குக் கிழக்குச் சுவர் சார்ந்து, மேற்குப் பார்த்து பீரோ இருக்குமேயானால், ஆண்கள் தேவையற்ற வீண்செலவுகளைச் செய்வார்கள். ஆண்களுக்கு நோய்க்கான செலவுகள் அதிகரிக்கும்.
கிழக்குப் பார்த்து பீரோவை வைத்தால், மகிழ்ச்சியான செலவுகளைத் தந்து, நிம்மதியையும் லாபத்தையும் தரும். கண்டிப்பாக செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். மங்கள காரியங்கள் மனையில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.
வீட்டின், தென்மேற்குச் சார்ந்த மூலை (நைருதி மூலை - குபேர மூலை என்று சொல்லப்படும்)யில் பீரோவை வைத்தால், பணம் கண்டிப்பாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பதுடன், பல தேவைகளைச் சிந்தித்து அதற்கேற்ப செலவுகளைச் செய்ய வைக்கும். குபேர மூலையில் பீரோவை வைக்கும் முன் குபேரனின் சிறப்புகளையும் பார்த்து விடுவோம்.
* திருமகளான மகாலட்சுமிதான் செல்வத்துக்கு அதிபதி. குபேரன் செல்வத்தைப் பராமரிக்கும் பணியைத்தான் செய்கின்றார். எப்போதும் குபேரன் படத்துடன் மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.
* வியாபாரத்தில், நாம் மேற்கொண்டுள்ள தொழிலில் லாபம் கிடைக்கவேண்டுமானால், குபேரனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
* திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது மறக்காமல் குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
* குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி என்பதால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழியே உருவாயிற்று.
* குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய 

வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், 

அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்