Friday, June 12, 2015

எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்:



எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்:!!!

. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.
4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.
6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.
7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.
9. எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.
10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.
11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.
12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.
13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.
14. பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.
15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.
16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.
17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.
18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.
19. கடையில் மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.
20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய கசுக்கொட்டையை (முந்திரி) பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.
21. புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.
22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்ககை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.
23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பானை (Fan) ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.
24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.
25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.
26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.
27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.
28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.
29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.
31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.
32. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.
34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.
35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.
36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.
37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.
39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.
40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.
41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.
42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.
43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.
44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.
45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.
46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.
47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.
48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.
49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.
51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.
52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.
53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.
54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.
55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.
56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.
57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.
58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.
59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.
60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.
61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.
62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.
63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.
64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.
65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.
67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.
69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.
70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.
71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.
72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.
73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.
74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.
75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.
76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.
77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.
79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.
80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.
81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.
82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.
83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.
84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.
85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.
86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.
87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.
88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.
89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.
90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.
91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.
92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.
93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.
94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.
95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.
96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.
97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.
98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.
99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.
100. துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.
101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.
102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.
103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.
104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.
105. அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.
106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.
107. ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.
108. சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.
109. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.
110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.
111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.
112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.
113. காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.
114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.
115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
116. கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.
117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.
118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.
119. தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் "பிரஷ்"ஷாக இருக்கும்.
122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.
123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.
124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.
126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.
127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.
128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.
129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
130. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.
131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.
132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.
133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.
134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.
135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.
136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.
137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.
138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்

தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது.

தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?
தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும்,செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை.
தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு,கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன

Tuesday, January 20, 2015

தலைமுடி வளர்ச்சிக்கு மாயங்களை செய்யும் சக்தி வாய்ந்த சில வீட்டு சிகிச்சைகள்!!!

தலைமுடி வளர்ச்சிக்கு மாயங்களை செய்யும் சக்தி வாய்ந்த சில வீட்டு சிகிச்சைகள்!!!

சிறியவர்களோ, இளைஞர்களோ, பெரியவர்களோ, தலை முடி என்றால் அனைவருக்குமே பிரியம் தான். முடியின் ஆரோக்கியம் தான் ஸ்டைல் மற்றும் அழகு போன்ற காரணிகளை தீர்மானிக்கும் முக்கிய பங்கை வகிக்கிறது. முடி கொட்டுதல், பொடுகு போன்றவைகள் சில தான் நாம் அன்றாடம் சந்திக்கும் பொதுவான முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாகும். சீக்கிரமே முடி கொட்டுவது வயதாவதற்கான அறிகுறியாகும். அதேப்போல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாசு, கடினமான வாழ்க்கை முறை மற்றும் முடிவில்லாத வேலைப்பளு ஆகியவைகளே முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. நாம் பெரும்பாலும் புறக்கணிக்கும் மற்றொரு காரணியும் உள்ளது. முன்பெல்லாம் பெண்கள் தங்கள் கூந்தலை மிக நன்றாக பராமரித்து வந்தனர். ஆனால் இன்றோ நமக்கு அதற்கெல்லாம் எங்கே நேரமுள்ளது? உடனடி தீர்வுகளை பெற வேண்டும் என்ற காரணத்தினால் இயற்கையான சிகிச்சைகளில் இருந்து ரசாயன சிகிச்சை முறைக்கு நாம் மாறி விட்டோம். ஆரோக்கியமான கூந்தலுக்கு உடனடி பலன்கள் சரியான தீர்வு அல்ல. அதனை காலப்போக்கில் நாம் கண்கூட பார்த்து உணர்ந்திருப்போம். மீண்டும் பழங்காலத்து தீர்வுகளை பின்பற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. அதற்கு முன்பு முடி வளர்ச்சியின் சுழற்சி பற்றி சற்று பார்க்கலாம்.

இயற்கையாகவே தலை முடியை வளர்ப்பது எப்படி?

தலை முடிக்கு இயற்கையான முறையில் பராமரிப்பை அளிக்கும் போது அதனால் பல பயன்கள் உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் குறைந்த செலவில் இது வேலை செய்கிறது. இது எப்படி தெரியுமா உள்ளது? கேக்கையும் செர்ரியையும் ஒரே நேரத்தில் உட்கொள்வதை போல் உள்ளது! மிகச்சிறந்த பலன்களை அளித்திடும் இயற்கையான சிகிச்சைகள் பல உள்ளது. அவைகளை நான்கு வகைகளாக பிரித்துள்ளோம்: சமையலறை சிகிச்சைகள், அதிமுக்கிய எண்ணெய்கள், உணவுகள் மற்றும் இயற்கையான பானங்கள்.

வெங்காய ஜூஸ்
முடி வளர்ச்சிக்கு மிகவும் பழமையான, ஆனால் மிகச்சிறந்த வீட்டு சிகிச்சை இதுவாகும். வெங்காய ஜூஸில் சல்ஃபர் வளமையாக உள்ளது. இது திசுக்களில் கொலாஜென் உற்பத்தியை ஊக்குவிக்கும். இதனால் கூந்தல் மீண்டும் வளர்ந்திட உதவிடும்.
பயன்படுத்தும் முறை: சிகப்பு வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அதன் சாற்றைப் பிழிந்து எடுங்கள். இதனை உங்கள் தலைச்சருமத்தின் மீது கவனமாக தடவுங்கள். பின் 15 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். பின் மிதமான ஷாம்புவைக் கொண்டு அலசுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்
இந்த வினிகர் உங்கள் தலைச்சருமத்தை மென்மையாக சுத்தப்படுத்தும். முடி வளர்ச்சியை வேகப்படுத்த, முடியின் PH சமநிலையை பராமரித்திடும்.
பயன்படுத்தும் முறை: முதலில் கூந்தலை ஷாம்பு போட்டு நீரில் நன்கு அலசவும். இறுதியில் அலசும் போது ஆப்பிள் சிடர் வினீகரை பயன்படுத்தவும். இதனால் ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான கூந்தலைப் பெறலாம். 1 லிட்டர் சொல்யூஷன் என்றால் 1 லிட்டர் தண்ணீருடன் 75 மி.லி. ஆப்பிள் சிடர் வினீகரை கலந்து கொள்ளுங்கள். இதனை சின்ன சின்ன டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.சிறிய அளவில் தயார் செய்ய வேண்டுமானால், 15 மி.லி. ஆப்பிள் சிடர் வினீகரை வெதுவெதுப்பான 1 கப் நீரில் கலந்திடவும். கூந்தலை கழுவிய பின்பு, இந்த கப்பை கடைசி முறை அலச பயன்படுத்துங்கள்

முட்டை மாஸ்க
உலகத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கலாச்சாரங்களால், சிறிய மாற்றங்களுடன், பின்பற்றப்படும் வீட்டு சிகிச்சை இது. இதில் அதிக அளவிலான புரதங்கள் உள்ளதால் புதிய முடி உருவாவதற்கு உதவிடும். மேலும் சல்ஃபர், ஜிங்க், இரும்பு, செலீனியம், பொட்டாசியம் மற்றும் ஐயோடின் ஆகியவைகளும் இதில் வளமையாக உள்ளது. பயன்படுத்தும் முறை: ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து, அதனுடன் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கலந்திடவும். வழுவழுப்பான பேஸ்ட் உருவாகும் வகையில் அதனை நன்றாக கலந்திடவும். இதனை தலை முடி முழுவதும் கவனமாக தடவுங்கள். பின் அதை அப்படியே ஒரு 20 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் தலை முடியை அலசிய பின்பு ஷாம்பு போட்டு குளித்திடுங்கள்.

வெந்தயம்
முடி கொட்டுதலுக்கு பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் மற்றொரு வீட்டு சிகிச்சை இதுவாகும். முடி வளர்ச்சியை அதிகரித்து, முடியின் இயற்கையான நிறத்தை பாதுகாக்கும் திறனை கொண்டுள்ளது வெந்தயம்.
பயன்படுத்தும் முறை: 1 டீஸ்பூன் வெந்தய பேஸ்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் தேங்காய் பாலை சேர்த்திடவும். இதனை தலைச்சருமும் மற்றும் கூந்தல் முழுவதும் தடவிடுங்கள். 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். மிதமான ஷாம்பு கொண்டு கழுவிடுங்கள்.

உருளைக்கிழங்கு ஜூஸ்
இது ஒரு ரகசியமான வீட்டு சிகிச்சையாகும். உருளைக்கிழங்கு ஜூஸின் முடி வளர்ச்சி குணங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி வளமையாக உள்ளது. முடி வளர்ச்சிக்கு இவைகள் முக்கியமானவைகளாகும். முடி மெல்லிசாகும் பிரச்சனையான ஆலோபீசியாவால் நீங்கள் அவதிப்பட்டு வந்தாலும் கூட இதனை பயன்படுத்தலாம்.
 பயன்படுத்தும் முறை: உருளைக்கிழங்கு ஜூஸை தலைச்சருமத்தின் மீது தடவவும். 15 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். பின் மிதமான ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவிக் கொள்ளுங்கள்.

மருதாணி பேக்
மருதாணி என்பது நன்றாக அறியப்படும் இயற்கை கண்டிஷனராகும். முடி வளர்ச்சிக்கும் இது நல்லதாகும். மந்தமாக மற்றும் வறண்டு காணப்படும் முடியை வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் மாற்ற இது உதவும். மேலும் நிறங்களையும் அளிக்கும். முடியின் வேரை திடப்படுத்தி, அதன் மூலம் முடியின் வளர்ச்சியை மேம்படுத்தும்.
பயன்படுத்தும் முறை: 1 கப் காய்ந்த மருதாணி பொடி, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ½ கப் தயிரை ஒன்றாக கலந்து, பேக் ஒன்றை தயார் செய்யவும். இதனை முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும். முழுமையாக காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். மிதமான ஷாம்பு கொண்டு கழுவி விடுங்கள்.

சிவப்பு மிளகாய்
சிவப்பு மிளகாய் முடி வளர்ச்சியை மேம்படுத்தி, முடி அடர்த்தி குறைவதை தடுக்கும். இதில் காப்சைசின் என்ற ரசாயனம் உள்ளது. இதனை தலைச்சருமத்தில் தடவும் போது நரம்புகள் முனைப்புடன் செயல்படும். இதனால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும், ஊட்டச்சத்து அதிகமாக உறிஞ்சப்படும், அதன் விளைவாக முடியின் வளர்ச்சி மேம்படும்.
பயன்படுத்தும் முறை: 1 டீஸ்பூன் மிளகாய் பொடியை 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் கலந்திடவும். முடியின் அடர்த்து குறையும் போது, இதனை தலைச்சருமத்தில் தடவுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவிடுங்கள்.

தேங்காய் பால்
தேங்காய் பாலில் புரதம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் அதிமுக்கிய கொழுப்புகள் வளமையாக உள்ளது. இது முடி உதிர்வையும், உடைதலையும் குறைக்கும். பயன்படுத்தும் முறை: தேங்காயில் இருந்து பாலை எடுக்கவும். இதனை தலையில் வேண்டிய இடத்தில் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். மிகச்சிறந்த முடி வளர்ச்சிக்கான சிகிச்சை இதுவாகும்.

கிரீன் டீ
நீங்கள் அறிந்ததை போல், கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக நிறைந்துள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடி உதிர்தலை தடுத்து, முடி வளர்ச்சியை மேம்படுத்தும்.
பயன்படுத்தும் முறை: வெதுவெதுப்பான கிரீன் டீயை தலைச்சருமத்தின் மீது தடவவும். ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும். குளிர்ந்த நீரில் அலசிடவும்.

நெல்லிக்காய்
நெல்லிக்காயில் உள்ள பல்வேறு அதிசய குணங்களைப் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் வைட்டமின் சி-யும் வளமையாக உள்ள கிடைங்கு என்றால் அது மிகையாகாது. ஆரோக்கியமான முடி வளர்ச்சியை மேம்படுத்தும் நெல்லிக்காய், தலை முடியின் நிறமியையும் மேம்படுத்தும். 
பயன்படுத்தும் முறை: 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது ஜூஸை 2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் உடன் கலந்திடுங்கள். இதனை தலைச்சருமத்தில் தடவுங்கள். பின் காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். இப்போது வெதுவெதுப்பான நீரில் நன்றாக அலசிடுங்கள்

சீரகம்


சீரகம் என்பது 100% ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களுடன் வரக்கூடியவை. இது கூந்தலை மீண்டும் நிறைவாக்க உதவும்.
பயன்படுத்தும் முறை: ஆலிவ் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெயில் சீரகத்தை ஊற வைக்கவும். இரவு முழுவதும் அது ஊறட்டும். மறுநாள் காலை, அதனை தலையில் தடவவும். 15 நிமிடங்களுக்கு பிறகு மிதமான ஷாம்பு கொண்டு கழுவுங்கள்.

மிளகு
ஆயுர்வேத மருந்தில் மிளகின் பயன்பாடு பரவலாக இருந்து வந்துள்ளது. உங்கள் கூந்தலை இது மென்மையாக்கி பளபளக்க வைக்கும். மேலும் கூந்தலின் அமைமுறையையும் மேம்படுத்தும். மிளகில் அதிமுக்கிய எண்ணெய்கள் உள்ளதால் உங்கள் தலைச்சருமம் நீர்ச்சத்துடன் இருக்கும்.
பயன்படுத்தும் முறை: 2 டீஸ்பூன் மிளகை 1/2 கப் எலுமிச்சை ஜூசுடன் கலந்திடவும். வழுவழுப்பான பேஸ்ட்டை தயார் செய்திடவும். இந்த பேஸ்ட்டை முடியின் வேர்களில் தடவிடவும். ஆழமாக உள்ளிரங்க உங்கள் தலையை துண்டால் மூடிக் கொள்ளுங்கள். அரை மணிநேரம் கழித்து அலசிடுங்கள்

செம்பருத்தி பூ
முடி வளர்ச்சிக்கான மற்றொரு வீட்டு சிகிச்சை தான் செம்பருத்தி பூ. "தலை முடி பராமரிப்பிற்கான பூ" என இது அறியப்படுகிறது. பொடுகை குணப்படுத்தவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்த பூ பயன்படுத்தப்படுகிறது. முடிக்கு அடர்த்தியை அளித்து, சீக்கிரத்தில் வயதாவதைத் தடுக்கவும் இது உதவிடும்.
பயன்படுத்தும் முறை: செம்பருத்தி பூவை தேங்காய் எண்எணய் அல்லது எள் எண்ணெயில் கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளவும். இதனை சமமான முறையில் தலையில் தடவவும். பின் மிதமான ஷாம்பு கொண்டு அலசவும்

பூண்டு
முடி உதிர்வை குறைப்பதற்கு மிக பரவலாக பயன்படுத்தப்படும் வீட்டு சிகிச்சை தான் பூண்டு. புதிய முடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
பயன்படுத்தும் முறை: நசுக்கிய பூண்டு சிலவற்றை ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இதனை முடியின் வேர்களில் நன்றாக தடவவும். தலையை நன்றாக கழுவுங்கள். நல்ல பலனைப் பெற இந்த சிகிச்சையை வாரம் மூன்று முறை பயன்படுத்தவும்.

வைட்டமின் ஈ எண்ணெய்
காலம் காலமாக, முடி வளர்ச்சிக்கு சிறந்த வீட்டு சிகிச்சையாக உள்ளது வைட்டமின் ஈ. வைட்டமின் ஈ எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளது. இதனால் இயக்க உறுப்புகளை எதிர்த்து திறம்பட செயல்படும். இதனால் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும். தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தின் அளவையும் அதிகரிக்கும்.
பயன்படுத்தும் முறை: வைட்டமின் ஈ எண்ணெய்யை கொண்டு தலைச்சருமத்தில் மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை, மிதமான ஷாம்பு கொண்டு கழுவினால், மென்மையான மற்றும் வழுவழுப்பான முடியை பெறலாம்

அதிமுக்கிய எண்ணெய் சிகிச்சைகள்
அதிமுக்கிய எண்ணெய்களை கொண்டு சீரான முறையில் மசாஜ் செய்து வந்தால், முடி வளர்ச்சி மேம்பட்டு, முடி உதிரவும் முடியின் நுனி பிளவுபடுவதும் குறையும். இது உங்கள் முடியை மென்மையாகவும், வழுவழுப்பாகவும் மாற்றும். ஏதாவது ஒரு அதிமுக்கிய எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்த பிறகு, சூடான துண்டு அல்லது ஷவர் கேப்பை கொண்டு தலையை மூடிடுங்கள். இதனால் தலையில் உள்ள துவாரங்கள் திறந்து கொள்ளும். அந்த எண்ணெயும் தலைச்சருமத்திற்குள் ஆழமாக இறங்கும். இது தலைச்சருமத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சிக்கு தேவையான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். சீரான முறையில் சூடான எண்ணெய் சிகிச்சை செய்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கி, பிரகாசமான கூந்தலைப் பெறலாம்.


தேங்காய் எண்ணெய்
கூந்தலுக்கான சிறந்த இயற்கையான கண்டிஷனர் இதுவாகும். பல நூற்றாண்டுகளாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. வளமையான புரதம் மற்றும் பொட்டாசியத்தைக் கொண்டுள்ள தேங்காய் எண்ணெய் தலைச்சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்; புதிய முடிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும்;
பாதிப்படைந்த முடிகளை சீர் செய்யும். மேலும் பொடுகுத் தொல்லை, முடி உடைதல் மற்றும் முடி உதிர்வை குறைக்கும். பாதிப்படைந்த முடிக்கான சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரு மாய்ஸ்சுரைசராகவும் அது செயல்படுகிறது. கூடுதலாக முடியை அதன் வேரிலிருந்து வலுப்படுத்தும். இதனால் முடி உடைதல் தடுக்கப்படும். மேலும் தலைச்சருமம் ஈரப்பதத்துடன் மற்றும் புத்துணர்வுடன் இருக்கும். சிறந்த பலனைப் பெறுவதற்கு சூடான தேங்காய் எண்ணெய் சிகிச்சையை பயன்படுத்துங்கள்.

ரோஸ்மேரி எண்ணெய்
அரபு நாடுகளில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஸ்மேரி செடியில் இருந்து வடித்தல் முறையில் இது தயாரிக்கப்படுகிறது. அணுக்கள் பிரிவதை அதிகரித்து. இரத்த குழாய்களை விரிவடைய செய்யும் ரோஸ்மேரி எண்ணெய். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இது முடி வளர்ச்சியை அதிகரித்து முடிக்கான டானிக்காகவும் செயல்படும். உங்கள் ஷாம்பு அல்லது கண்டிஷனருடன் கலந்தும் ரோஸ்மேரி எண்ணெய்யை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால், அதனை ஆலிவ் எண்ணெய் அல்லது டீ-ட்ரீ எண்ணெய் போன்ற பிற அதிமுக்கிய எண்ணெய்களுடன் கலந்தும் உங்கள் தலைச்சருமத்திற்கு மசாஜ் செய்யலாம்.


சேஜ் எண்ணெய்
பலவித உடல்நல பயன்களுக்காக சேஜ் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முடி உதிர்வு சிகிச்சைக்கு சேஜ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். முடி உதிர்வு மட்டுமின்றி பருக்கள், சுருக்கங்கள் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் சேஜ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதனை ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது ரோஸ்மேரி எண்ணெய் போன்ற சில அதிமுக்கிய எண்ணெயுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய்யை அழகு எண்ணெயாகவும் கூறலாம். முடி பயன்களுக்காக நன்கு அறியப்படும் எண்ணெய் அது. முடி அடர்த்தி குறைதல் மற்றும் கொத்து கொத்தாக முடி உதிர்தல் பிரச்சனையான ஆலோபீசியாவிற்கு சிகிச்சை அளிக்க லாவெண்டர் எண்ணெய் பரவலாக பயன்படுத்தபடுகிறது. முடி வளர்ச்சி போக, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்கும். பல்வேறு ஸ்பா சிகிச்சைகளுக்கு இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயன்படுத்தும் முறை: லாவெண்டர் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய், தைம் எண்ணெய் மற்றும் ஜோஜோபா எண்ணெய்யை சரிசமமான அளவில் கலந்து, அதிமுக்கிய எண்ணெய் ஒன்றை தயார் செய்யுங்கள். இதனை உங்கள் தலைச்சருமத்தில் தடவுங்கள். பின் ஷவர் கேப்பை கொண்டு தலையை மூடுங்கள். ஒரு மணிநேரத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். பின் தலையை நன்றாக கழுவி அலசுங்கள்.

ஜோஜோபா எண்ணெய்
மாய்ஸ்சுரைசிங் மற்றும் ஈரப்பதத்தை ஏற்றும் குணங்களும் ஜோஜோபா எண்ணெயில் உள்ளது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமும், மயிர்ப்புடைப்பிற்கு ஈரப்பதத்தை அளிப்பதன் மூலமும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஜோஜோபா எண்ணெய். மேலும் வறண்ட மற்றும் பாதிப்படைந்த முடிகளை சீர் செய்யும்.

ஆளிவிதை எண்ணெய்

ஆளிவிதையில் அதிமுக்கிய கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ளது. இது வறண்ட, பாதிப்படைந்த மற்றும் உடையக்கூடிய முடிகளை ஆரோக்கியமானதாகவும், பளபளப்பானதாகவும் மாற்றும். இந்த எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை மேம்படுத்தும். பயன்படுத்தும் முறை: உங்கள் தினசரி உணவுகளில் ஆளிவிதை எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை பிற அதிமுக்கிய எண்ணெய்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

ஆலிவ் எண்ணெய்
அழகின் மீது ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆரோக்கியம் மற்றும் அழகு பயன்களைப் பற்றி நன்றாக அறிந்திருப்பார்கள். ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க், ஸ்க்ரப், உடல் எண்ணெய்கள், ஹேர் டானிக் போன்ற பலவற்றிலும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. முடி உதிர்வை குணப்படுத்தவும், தடுக்கவும் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. புதிய முடி வளர்வதற்கும் இது ஊக்குவிக்கும். இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால் DTH ஹார்மோன் உருவாவது தடுக்கப்படும். இதனால் முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளதால், ஒட்டு மொத்த முடியின் ஆரோக்கியத்திற்கும் இது பயனுள்ளதாக விளங்கும். கூந்தலை மென்மையாகவும், வழுவழுப்பாகவும் மாற்றுவதன் மூலம் இயற்கையான கண்டிஷனராகவும் ஆலிவ் எண்ணெய் செயல்படுகிறது. பயன்படுத்தும் முறை: உங்கள் தினசரி உணவில் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை ப்ரீ-ஷாம்பு சிகிச்சையாக பயன்படுத்துங்கள். சூடான எண்ணெய் சிகிச்சைக்கு, இதனை லாவெண்டர் எண்ணெய், கற்பூரவள்ளி எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெயுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.

விளக்கெண்ணெய்

உங்கள் முடிகளை வேகமாக, திடமாக மற்றும் பளபளப்புடன் வளரச் செய்ய மிகவும் பயனுள்ள எண்ணெய்களில் ஒன்றாக விளங்குகிறது விளக்கெண்ணெய். முடி வளர்ச்சிக்கு இது சிறந்த இயற்கை சிகிச்சையாக கருதப்படுகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இது உதவும். அதே போல் வழுக்கை விழுவதும் குறையும். பயன்படுத்தும் முறை: விளக்கெண்ணெய்யை சூடாக்கி, அதனை கொண்டு சூடான எண்ணெய் மசாஜ் சிகிச்சை செய்யுங்கள். சுத்தமான தலைச்சருமத்தில் இதனை தடவுங்கள். 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். நன்றாக மசாஜ் செய்யுங்கள். வெப்பமான ஈர துண்டால் தலையைச் சுற்றிக் கொள்ளுங்கள். அதனை அப்படியே 20 நிமிடங்களுக்கு வைத்திடுங்கள். இந்த எண்ணெய் பிசுபிசுப்புடன் இருப்பதால், அதனுடன் சற்று எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளலாம். இதனால் அது சற்று வழுவழுப்பாக இருக்கும். மேலும் தலையில் உள்ள பொடுகு தொல்லையையும் போக்கும்

முடி வளர்ச்சிக்கான உணவுகள்!!!
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும். முடி உதிர்வை தடுக்கவும் உங்கள் உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஜிங்க் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், கார்போனேட்டட் பானங்கள், சிகரெட் மற்றும் மதுபானம் ஆகியவைகளை முழுமையாக நிறுத்தினால், உங்கள் உடலுக்கும் தலைச்சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த பயனை அளிக்கும். வைட்டமின் மற்றும் கனிமங்கள் நிறைந்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், கார்போஹைட்ரேட்ஸ், ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் மற்றும் புரதம் அடங்கிய உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். முடி வளர்ச்சிக்கு நன்மையை அளிக்கும் ஃபைட்டோ ஊட்டச்சத்துக்கள் இவைகளில் வளமையாக உள்ளது. சிறந்த முடியைப் பெற கீழ்கூறியவைகளை உங்கள் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புரதம் நிறைந்த உணவுகள்
கரோட்டீன் என்ற விசேஷ புரதத்தை நம் முடி கொண்டுள்ளது. அதனால் வளமையான புரதத்தை கொண்ட உணவை நாம் உண்ண வேண்டும். முட்டைகள், கோழிக்கறி, டோஃபு, சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ் மற்றும் இதர உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முடிக்கு தேவையான புரதத்தை வளமையான அளவில் இது கொண்டுள்ளது. புதிய முடி வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பான மற்றும் மென்மையான முடியை அளிக்கும்.


வைட்டமின் ஏ
முடி வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ மிகுந்த பயனை அளிக்கும். ஆனாலும் அதனை அதிகமாக பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படும். மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, உலர்த்தியப் பழம், கேரட் போன்ற சில பழங்களின் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.


வைட்டமின் பி
ஆக்சிஜனை உடலின் அனைத்து இடங்களும் அழைத்துச் செல்லும் ஹீமோகுளோபின் உற்பத்தியை வைட்டமின் பி ஊக்குவிக்கும். இது தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உருளைக்கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி, ஓட்ஸ், மீன் மற்றும் பீன்சை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்


வைட்டமின் சி
கொலாஜென் உற்பத்திக்கும் சருமத்தில் உள்ள இயக்க உறுப்புகளை எதிர்த்து போராடவும் வைட்டமின் சி உதவுகிறது. நெல்லிக்காய், ஆரஞ்சு, கிவி, கொய்யாப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள மறந்து விடாதீர்கள்

வைட்டமின் ஈ
உங்கள் உணவில் வைட்டமின் ஈ-யை சேர்த்துக் கொள்வதால், தலைச்சரும இரத்த நாள செயல்பாடு ஊக்குவிக்கப்படும். இதனால் இரத்த ஓட்டம் மேம்பட்டு முடி வளர்ச்சி மேம்படும். வைட்டமின் ஈ அடங்கிய தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய், டோஃபு போன்ற உணவுகளை உட்கொள்ளவும். இதனை முடிந்த அளவிற்கு உட்கொள்வது மிகுந்த நல்லதாகும்.

பச்சை காய்கறிகள்
கரும்பச்சை காய்கறிகளை அதிகமாக உண்ணுங்கள். இதில் இரும்புச்சத்து உள்ளதால், முடி வளர்ச்சிக்கு இது கண்டிப்பாக தேவைப்படும். அதே போல் மீனிலும், நட்ஸிலும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ளது.


இயற்கை தீர்வுகள்
போதிய பராமரிப்பும், சிகிச்சையும் எந்த ஒரு தலைச்சரும மற்றும் முடி பிரச்சனையையும் அண்ட விடாமல் செய்யும். கண்மூடித்தனமான முடி உதிர்வை எதிர்த்து போராடும் சக்தி உங்களுக்கு இருந்தால் மட்டுமே அனைத்து விதமான இயற்கை தீர்வுகளும் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தும்

சிகை அலங்கார பொருட்களுக்கு தடை போடுங்கள்
" எந்த ஸ்டைலும் சிறந்த ஸ்டைல் கிடையாது" என்ற புகழ்மிக்க பழமொழி ஒன்றே உள்ளது. பல்வேறு சிகையலங்கார பொருட்களில் தீமையான ரசாயனங்களும் மேம்போக்கான ஏஜென்ட்களும் அடங்கியிருக்கும். இது சில நேரம் மிக ஆபத்தாய் போய் முடியும். அவ்வகை சிகையலங்கார பொருட்களைப் பயன்படுத்திய சில நாட்களுக்கு நீங்கள் அழகாக தெரிவீர்கள். ஆனால் நாளடைவில் உங்கள் கூந்தல் மற்றும் தலைச்சருமத்தின் நிலையை அது எவ்வாறு பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. அதனால் முடியின் நிறங்கள், சீரம் மற்றும் ஸ்ட்ரெயிட்னர் போன்ற சில தீமையான ஸ்டைல் பொருட்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்.


சீரான முறையில் தலை முடியை சீவி, அளவை குறைத்து கொள்ளுதல் 
உங்கள் தலை முடியை ஒரு நாளைக்கு மூன்று முறையாவது சீவுங்கள். மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது முடியை ட்ரிம் செய்து கொள்ளுங்கள். சீரான முறையில் தலை முடியை சீவி கொள்வதும், அதனை ட்ரிம் செய்து கொள்வதும் புதிய முடியின் வளர்ச்சிக்கு முக்கியமாகும். தலை முடியை சீவுவதால் நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கும். மயிர்ப்புடைப்பையும் இது ஊக்குவிக்கும். இதனால் புதிய முடி இயற்கையாகவே வளரும். இந்த சிறந்த இந்திய வீட்டு சிகிச்சைகளைப் பின்பற்றி ஆரோக்கியமான முடி வளர்ச்சியைப் பெற்றிடுங்கள். உங்கள் ரகசியமான வீட்டு சிகிச்சைகளை எங்களுடன் பகிர்ந்திடுங்கள்