பிராணாயாமத்தின் நிலைகள்
மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
முதல் நிலை:
இது சாதாரணப் பிராணாயாமம்.
'தாழ்ந்த வகை’ எனப்படும் இந்த முதல் விதத்தில், 12 முறை உள்ளே இழுத்து (பூரகம் செய்து), 48 முறை உள்ளே வைத்திருந்து (கும்பகம் செய்து),24 முறை மூச்சை வெளியே (ரேசகம்) விடுவது. (ஒரு முறை என்பது, கண் மூடி கண் திறக்கும் கால அளவு. இதை ஒரு மாத்திரை என்றும் கணக்கிடலாம்.).ஒரு மாதம் வரை திணறல், சிரமம் இல்லாதபடி செய்ய பழகியதும், நடுநிலைக்குப் போகலாம்.
நடு நிலை:
இதில், மூச்சை 16 முறை உள்ளிழுத்து 64 முறை நிறுத்தி, சீராக 32 முறை வெளியே விடலாம். உடம்பில் வியர்வை வழியும். அதைத் துண்டால் துடைத்துக்கொள்ளாமல் வெறும் கைகளாலேயே துடைப்பது நலம்.
இந்தவிதமான பிராணாயாமத்தை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து பழகிட வேண்டும். இதன் பிறகே உயர்நிலை பிராணாயாமத்தை அடையவேண்டும்.
உயர் நிலை:
இதில் 24 முறை மூச்சை உள்ளே இழுக்கவும். உடனே, 96 முறை உள்ளே நிறுத்திக் கும்பகம் செய்யவும். கும்பகம் செய்தவுடன் 48 முறை வெளிவிடவும். இப்படி ஒழுங்காக உயர்த்தி, திணறல் இன்றியும், மூச்சை விரைவின்றி சீராகவும் இழுக்கவும் விடவும் பழகவேண்டும்.
காலை 4 மணிக்கு அதாவது சூரிய உதயத்துக்கு முன் எழுந்து விரும்பும் தெய்வத்தை வணங்கிவிட்டு, பிராணாயாமத்தை ஆசன நிலையில் பயிற்சி செய்யவேண்டும்.
காலை 11 மணி, மாலை 5 மணி, இரவு 11 மணி என வைத்துக்கொண்டு நான்கு முறை பயிற்சியில் ஈடுபடவேண்டும். ஒரு தடவையில் 80 என்று 320 பிராணாயாமங்கள் ஒரு நாளில் பயிற்சி செய்வதுதான் தீவிர பயிற்சி.
பலன்கள்: பயிற்சியில் நாம் பிரணவ மந்திரத்தை ஜெபிக்குபோது உடலில் வெப்பம் உண்டாகிறது. இது அழுக்குகளைப் போக்கும். புது நிலையில் நாடிகள் தூண்டப்படுகின்றன. சிலருக்கு, உடலின் பல பாகங்களில் வலிகூட ஏற்படலாம். இருந்தாலும் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வரவேண்டும். உடல் வெப்பத்துக்கு ஏற்ப, பால், வெண்ணெய் ஆகியவை பயன்படுத்தவேண்டும். எண்ணெய்க் குளியல் அவசியம் தேவை.
எளிய பிராணாயாமங்கள்
உடலின் உதவியின்றி மனம் ஒன்றும் செய்ய முடியாது. மனம் அனுசரிக்காமல் உடலாலும் ஒன்றும் சாதிக்க முடியாது. ஆகவே, இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயல்படுமாறு பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தலைவலி, வயிற்றுவலி, சூடு, குளிர்... என வேறு உபாதைகளுடன் உடல் இருந்தால், அது நோய் கொண்ட நிலை. இந்த நிலையில் மனதால் பிரயோகப் பயிற்சிகள் செய்ய முடியாது. ஆகவே, உடலை ஆசன சாத்திரப்படி பல ஆசனங்களால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். உடல் நினைவே இன்றி இயங்க முடியும்போதே நாம் உடல் நல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று பொருள்.
எளிமையான ஓர் ஆசனத்தில் நீண்ட நேரம் உட்காரக்கூடிய பக்குவத்துக்கு நாம் தயாராக வேண்டும். நெஞ்சு, கழுத்து, தலை போன்றவை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். உடல் முன்னால், பின்னால், இடம், வலம் என எப்படியும் சாயாமல், வளையாமல் நேராக உட்கார்ந்து, நிமிர்ந்திருக்க வேண்டும்.
தொடர்ந்து உட்காரும்போது ஆசன நிலை சரியாக அமைந்துவிடும். சற்றே குண்டாக இருப்பவர்களுக்கு பத்மாசனம் உடனே வந்துவிடாது. ஆசனம், சரியாக வரும் வரை பயிற்சியைத் தொடங்காதிருக்க வேண்டியதில்லை. ஆசன நிலையுடன் இதையும் பழகிவரலாம்.
வயோதிகர்களும் முடியாதவர்களும் நாற்காலியில் உட்கார்ந்தபடியே பிராணாயாமம் செய்யலாம்.
ஒழுங்குமுறை
பிராணனின் வெளித்தோற்றம் - உடல்மூச்சு. எனவே, ஒழுங்கற்று நடக்கும் மூச்சை முதலில் ஒழுங்குபடுத்தவேண்டும். இதில் இருந்து பிராணாயாமம் தொடங்கிவிடுகிறது.
இதில் ஜெயித்தால் உடல், மன இயக்கங்கள், பிறருடைய செயல்கள், பிரபஞ்ச இயற்கை... என எல்லாவற்றையும் படிப்படியாகக் கட்டுப்படுத்தும் திறன் வந்தடையும்.
மனநிலைக்கு ஏற்ப மூச்சு விரைவாகவும் மெதுவாகவும் இல்லாமல், அதை அடக்கி, மாற்றி அமைக்கும்போது, மாறுபடும் மனநிலையைக்கூட மூச்சு கட்டுப்படுத்திவிடுகிறது.
பலன்கள்: உடலும் மனமும் கட்டுப்பட்டு இருக்கும். நினைத்ததைச் சாதிக்க முடியும். நல்ல தோற்றப் பொலிவு, உடல் பலம், மன உறுதி, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம். வீரியமும் ஒருமுகப்பட்ட மனமும் எதையும் வசீகரிக்கும் சக்தியும் மேம்படும்.
சுவாசக் கணக்கு
ஒருவர் நாள் ஒன்றுக்கு சுமார் 21,600 முறை மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகிறார். அவர் வேகவேகமாக மூச்சு விடும்போது, இந்த எண்ணிக்கை சீக்கிரமே குறைந்து, ஆயுளும் குறைகிறது. யோகி, ஆயுளை ஆண்டுக்கணக்கால் அளவிடுவது இல்லை. மூச்சுக் கணக்கில்தான் அளக்கின்றனர். உயிராற்றல் அதாவது பிராணன், வெளி மூச்சுக்குப் பிறகு உள்ளே இழுத்துக்கொள்ளும் மூச்சின் அளவிலேயே அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். ஒருவர், நிமிடத்துக்கு 15 முறை மூச்சை இழுப்பதால் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறார் என்று கணக்கிடப்படுகிறது.
சுவாச ஒழுங்கு
உள்ளிழுக்கும் மூச்சை மெதுவாக இழுத்துப் பழகுவதுபோல, வெளிவிடுவதையும் மெள்ளச் செய்தால், இதுவே சுவாச ஒழுங்கு.உள்ளிழுப்பதை 'சுவாசம்’ என்றும், வெளிவிடுவதை 'பிரச்வாசம்’ என்றும் கூறுவர். இரண்டின் வேகத்தையும் குறைத்தால் அதை நிகழ்த்தும் பிராணன் நமக்கு லாபமாகிறது. ஆகவே, நிமிடத்துக்கு 15 முறை மூச்சுவிடும் மனிதனுக்கு, 100 ஆண்டு ஆயுள். ஒரு நிமிடத்துக்கு நான்கே மூச்சுவி டும் ஆமை எத்தனை காலம் வாழ்கிறது தெரியுமா400 ஆண்டுகள்! ஆச்சரியமாக இருக்கிறதுதானே!? பிராணாயாமம் மூலம் சக்தி அதிகரிக்கிறது. சக்தி இல்லையெனில் சுகம் இல்லை. எனவே, பிராணனே உடலுக்கான பலத்தையும் சுகத்தையும் தரவல்லது.
பிராணாயாமங்களிலும் பல வகை
சீத்காரி - உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
சீதளி - உடல் குளிர்ச்சியை உணரச் செய்யும்.
உஜ்ஜாயி - மார்புப் பகுதி நலம் அடையும்.
பிரமரீ - வண்டு போல ரீங்காரம் செய்வது.
நாடி சுத்தீ - நாடிகளைத் தூய்மையாக்குதல்.
பிளவனீ - வயிற்றில் பிராணனை நிரப்புதல்.
சுரியபேதா - பிங்கலை வழி பூரகம் செய்தல்.
மேல் உடலைத் தூய்மையாக்கும்.
மூர்ச்சா - மூர்ச்சை வரும் வரை செய்தல்.
கபாலபாதி - கபாலத்தை ஒளிமிகச் செய்தல்.

No comments:
Post a Comment